2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவாக 9% வளர்ச்சி தேவை; ரகுராம் ராஜன் கணிப்பு
2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவாக 9% வளர்ச்சி தேவை; ரகுராம் ராஜன் கணிப்பு
UPDATED : ஜூன் 05, 2025 12:00 AM
ADDED : ஜூன் 05, 2025 04:00 PM

புதுடில்லி:
2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாக 8 முதல் 9% பொருளாதார வளர்ச்சி தேவை என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கணித்துள்ளார்.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் கூறியதாவது: இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி 6.5% என்பது மிகவும் சிறந்த வளர்ச்சி தான். 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாக 8 முதல் 9% பொருளாதார வளர்ச்சி தேவை. தற்போது, இந்தியாவின் தருணமாக இருக்கலாம். ஆனால் நாம் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகங்களில் சிறந்து விளங்க வேண்டும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
வளர்ச்சியைத் தக்க வைக்க இந்தியா தீர்க்கமாகச் செயல்பட வேண்டும். இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி, 4வது பெரிய பொருளாதார நாடாக மாறியது மைல்கல் ஆகும். ஆனாலும் இந்த நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம்.
அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி முன்னேறுவோம். இதற்கு இன்னும் 1 அல்லது 2 ஆண்டுகள் ஆகலாம். நாம் ஒரு நல்ல பாதையில் செல்கிறோம் என்பதற்கான சான்றாக இதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்புகள்
இந்தியாவில் தனிநபரின் வருமானம் அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த 15 ஆண்டுகளில் நாம் எப்படி இருக்க போகிறோம் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.ஏற்றுமதியை அதிகரிக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். அப்போது தான், 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய முடியும்.
இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.