UPDATED : ஜன 08, 2026 10:30 AM
ADDED : ஜன 08, 2026 10:32 AM

திருப்பூர்:
ஆதார் 'அப்டேட்' செய்ய முடியாமல், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அலைமோதுகின்றனர். மாவட்டத்தில், ஆதார் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக, ஆதார் அட்டை மாறியுள்ளது. வங்கி கணக்கு முதற்கொண்டு, கல்விச்சான்று உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 'அட்மிஷன்' மற்றும் மாணவ, மாணவியருக்கு அரசின் சார்பில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கும் ஆதார் எண் அவசியமாகிறது. இந்நிலையில், அன்றாட வாழ்க்கையில் பிரதானமாக மாறிவிட்ட ஆதார் எண் 'அப்டேட்' செய்வது, பெயர் சேர்ப்பது, முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் உள்ளிட்டவற்றை செய்து கொள்ள தினசரி, ஆயிரக்கணக்கான மக்கள், மாணவ, மாணவியர் குவிகின்றனர்.
ஆனால் ஆதார் இசேவை மையங்களில், தினமும், 30 முதல், 40 பேருக்கு மட்டுமே இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில், தினமும், 10 முதல், 20 பேருக்கு ஆதார் சேவை வழங்கப்படுகிறது. இதற்கு, முந்தின நாளே 'டோக்கன்' வாங்க வேண்டும். ஆதார் பணிகளை செய்ய, ஒரு நாள் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை தான் உள்ளது.
இதனால், ஆதார் இ சேவை மையங்கள், தபால் நிலையங்கள் முன், காலை, 7:00 மணியில் இருந்தும் கூட மக்கள் காத்திருப்பதை பார்க்க முடிகிறது.
சில இடங்களில் ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினரின் முயற்சியுடன் தபால் நிலையத்துடன் இணைந்து, ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதிலும், கூட்டம் அலைமோதுகிறது. பல நேரங்களில் இணைய சேவையில் பழுது உள்ளிட்ட பல பிரச்னைகளால், ஆதார் திருத்தப்பணிகளை செய்து கொள்ள முடிவதில்லை. இதனால், பொது மக்களுக்கு மன உளைச்சலும் அலைகழிப்பும் ஏற்படுகிறது.
'மாணவ, மாணவியருக்கு பெரும்பாலும் சனிக்கிழகைளில் விடுமுறை இருக்கும் பட்சத்தில், அந்நாளில் ஆதார் மையங்கள் விடுமுறையில் இருக்கும். ஆதார் மையங்கள் செயல்படும் வார நாட்களில், மாணவ, மாணவியருக்கு விடுமுறை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஆதார் திருத்தப்பணி செய்வதில் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது' என, பெற்றோர் புலம்புகின்றனர்.
எனவே, தாலுகா மற்றும் வட்டார அளவில், ஆதார் சிறப்பு முகாம் பணிகளை விரிவுபடுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

