மாணவர்களுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம் துவங்கியது
மாணவர்களுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம் துவங்கியது
UPDATED : மே 24, 2024 12:00 AM
ADDED : மே 24, 2024 11:59 AM

விழுப்புரம்:
விழுப்புரத்தில் கல்வித்துறை மற்றும் எல்காட் நிறுவனம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு சிறப்பு முகாம் நேற்று துவங்கியது.
விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை, எல்காட் நிறுவனம் சார்பில், ஆதார் பதிவு சிறப்பு முகாம் மூன்று நாட்கள் நடக்கிறது. விழுப்புரம் அரசு மருத்துவமனை சாலை, நகராட்சி தொடக்க பள்ளி வளாகத்தில் நேற்று காலை 11:00 மணிக்கு ஆதார் பதிவு முகாம் தொடங்கியது.
முகாமில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 3 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்களுடன் வந்து, ஆதார் அட்டை பெறுவதற்கு பதிவு செய்தனர். இதே போல், 5 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் பலர் தங்களின் ஆதார் பதிவையும் புதுப்பித்தனர்.
இவர்களுக்கு கை விரல் ரேகை, கண் கருவிழி பதிவுகள் எடுக்கப்பட்டு பதிவு செய்தனர்.
இந்த சிறப்பு முகாம், 24ம் தேதி வரை, தினசரி காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. முகாமிற்கு வரும் பள்ளி மாணவர்கள் பிறப்பு சான்றிதழ், பெற்றோர் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை கொண்டு வந்து பதிவு செய்துகொள்ளலாம். 6 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்கள், தங்களின் பழைய ஆதார் அட்டையை எடுத்து வந்து, புதுப்பித்துக்கொள்ளலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகர், நாராயணன், தமிழழகன், கொளஞ்சி, கணபதி உள்ளிட்டோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.