UPDATED : மே 02, 2024 12:00 AM
ADDED : மே 02, 2024 10:02 AM
மதுரை:
மதுரை அரசு பள்ளிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதாரில் புதுப்பித்தல், மாற்றங்கள் (அப்டேஷன்) செய்ய வேண்டியுள்ளது. இதற்காக இல்லம் தேடி கல்வித் திட்ட (ஐ.டி.கே.,) தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நலத்திட்டங்கள், கல்வி உதவித் தொகை பெறுவது தொடர்பாக மாணவர்களுக்கு ஆதார் தேவையாக உள்ளது. ஆனால் பலருக்கு ஆதார் இல்லாதது, ஆதார் 'அப்டேஷன்' செய்யாதது போன்ற பிரச்னைகள் உள்ளன. 20 ஆயிரம் மாணவர்களுக்கு பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் தகவல் அடிப்படையில் ஆதார் எடுக்கப்படுகிறது. அதன் பின் 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 17 வது வயதில் ஆதாரில் அப்டேஷன் செய்ய வேண்டும். மதுரையில் அப்டேஷன் இல்லாதவர்கள் என 20 ஆயிரம் மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கருவிழி, கைரேகை உள்ளிட்ட விவரங்கள் இல்லாததால் கல்வித் உதவித் தொகை பலன்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அம்மாணவர்களின் ஆதார் பிரச்னையை தீர்க்க ஐ.டி.கே., தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எல்காட் தேர்வும் நடத்தியது. கோடை விடுமுறைக்கு பின் அவர்கள் பள்ளிகளுக்கே சென்று 'அப்டேஷன்' மேற்கொள்ளவுள்ளனர் என்றார்.