தனியார் பள்ளியில் 34 மாணவர்கள் வெளியேற்றம் ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு
தனியார் பள்ளியில் 34 மாணவர்கள் வெளியேற்றம் ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு
UPDATED : மே 15, 2025 12:00 AM
ADDED : மே 15, 2025 11:57 AM
புதுடில்லி:
உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணம் செலுத்தாத 34 மாணவர்களை துவாரகாவில் உள்ள தனியார் பள்ளி நீக்கியுள்ளது என, ஆம் ஆத்மி டில்லி மாநில தலைவர் சவுரவ் பரத்வாஜ் கூறினார்.
ஆம் ஆத்மி டில்லி மாநில தலைவரும், முன்னாள் அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ், நிருபர்களிடம் கூறியதாவது:
தனியார் பள்ளிகளுடன் பா.ஜ., அரசு கூட்டணி வைத்துள்ளது. தனியார் பள்ளிகளில் தன்னிச்சையாக கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பது குறித்து, புகார் அளித்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
துவாரகாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணம் செலுத்தாத 34 மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை வாசலில் வைத்தே திருப்பி அனுப்பியுள்ளனர். இது, உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரச்னை. மேலும், பல தனியார் பள்ளிகளில் உயர்த்தப் பட்ட கட்டணம் செலுத்தாத மாணவர்கள் வகுப்பறைகளில் அவமானப்படுத்தப் படுகின்றனர்.
அதிக கட்டணம் செலுத்த முடியாத பெற்றோரையும் பள்ளி நிர்வாகம் அவமானப்படுத்துகிறது. இது, மிகவும் கவலைக்குரியது. கல்விக் கட்டணம் தொடர்பான புகார்களை விசாரிக்க டில்லி பா.ஜ., அரசு அமைத்த குழுக்கள் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணைக் குழு அளித்த அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும்.
கல்விக் கட்டண உயர்வை எதிர்க்கும் போராட்டங்களைத் தடுக்க தனியார் பள்ளி நிர்வாகங்கள் பவுன்சர்களை நியமித்துள்ளன. பல தனியார் பள்ளி உரிமையாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர் பா.ஜ., உறுப்பினர்கள். அதில் சிலர் கட்சியில் பதவியும் வகிக்கின்றனர்.
அதேபோல, ஒரு பள்ளியின் 31 மாணவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கான வழக்கமான கட்டணத்தை நெட் பேங்கிங் வாயிலாக நேற்று முன் தினம் செலுத்தினர். ஆனால், அந்த 31 பேரையும் பள்ளி நிர்வாகம் வகுப்புக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
மேலும், ஏப்ரல் மாதத்துக்கான கட்டணத்துக்கு கொடுத்த காசோலையையும் வங்கியில் டெபாசிட் செய்யவில்லை. இதுகுறித்து, கல்வி இயக்குனரகம் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் ரேகா குப்தா தலைமையில் ஏப்ரல் 29ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், டில்லியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், இந்த மசோதா சட்டசபையில் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.