UPDATED : மே 15, 2025 12:00 AM
ADDED : மே 15, 2025 11:58 AM
சண்டிகர்:
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டிருந்த சூழ்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மூடப்பட்ட பள்ளிகள், ஆறு நாட்களுக்குப் பின் திறக்கப்பட்டன.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், நம் ராணுவம் நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பாக்., எல்லையோரத்தில் அமைந்துள்ள அமிர்தசரஸ், தரன்தரன், பதான்கோட், பாசில்கா, பெரோஸ்பூர் மற்றும் குருதாஸ்பூர் ஆகிய இடங்களில் பள்ளிகள் கடந்த 8ம் தேதி மூடப்பட்டன.
அமிர்தசரஸ், தரன் தரன், பதான்கோட், பாசில்கா மற்றும் பெரோஸ்பூர் ஆகிய ஐந்து எல்லையோர மாவட்டங்களில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அதேபோல, மார்க்கெட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.