விடைத்தாள் மதிப்பீட்டு பணியை புறக்கணித்தால் நடவடிக்கை: கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை
விடைத்தாள் மதிப்பீட்டு பணியை புறக்கணித்தால் நடவடிக்கை: கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை
UPDATED : ஜூன் 27, 2024 12:00 AM
ADDED : ஜூன் 27, 2024 10:18 AM

மதுரை:
விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லுாரி பேராசிரியர்களை மாற்றுப்பணியில் விடுவிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குநர் (ஆர்.ஜே.டி.,) குணசேகரன் எச்சரித்துள்ளார்.
மதுரை காமராஜ் பல்கலை 2024 ஏப்ரல் பருவ தேர்வு முடிவு அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது. பல்கலை இணைவு பெற்ற கல்லுாரிகளில் இன்னும் முடிவு வெளியிடவில்லை. இதன் பின்னணியில் பல சுயநிதி கல்லுாரிகளில் மதிப்பீட்டு பணி ஒதுக்கப்பட்ட பல உதவி, இணை பேராசிரியர்கள் பங்கேற்பதில்லை எனவும், பல கல்லுாரிகளில் பணி ஒதுக்கீடு பெற்ற பேராசிரியர்களுக்கு கல்லுாரி நிர்வாகம் மாற்றுபணி அனுமதி வழங்கவில்லை எனவும் சர்ச்சை எழுந்தது. பல்கலை சார்பில் ஆர்.ஜே.டி., குணசேகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு ஆர்.ஜே.டி., சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதில், சுயநிதி கல்லுாரி ஆசிரியர்கள் பலரை கல்லுாரி நிர்வாகம் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்புவதில்லை. அவர்களுக்கு மாற்றுப்பணிக்கான விடுப்பு வழங்காமல் அந்நாட்களுக்குரிய சம்பளம் வழங்க கல்லுாரிகள் மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் சம்பளத்துடன் மாற்றுப்பணி அனுமதி வழங்கி அனுப்பி வைக்க வேண்டும். இல்லையென்றால் கல்லுாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை அதிகாரிகள் கூறுகையில், இப்பல்கலையில் ஏப்.,2024 பருவத் தேர்வு முடிவு வெளியிடாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பல்கலை கன்வீனர் குழு ஒருங்கிணைப்பாளராக கல்லுாரிக் கல்வி இணை இயக்குநர் கார்மேகம் உள்ளார். அவரிடம் விடைத்தாள் திருத்த பேராசிரியர்கள் வருவதில்லை, கல்லுாரிகள் அவர்களுக்கு பணிவிடுப்பு வழங்குவதில்லை என்ற பிரச்னை குறித்து பல்கலை விளக்கம் அளித்தது. அவரது கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளுக்கு ஆர்.ஜே.டி., மூலம் எச்சரிக்கை விடுக்க உத்தரவிட்டுள்ளார் என்றனர்.
முதலில் சம்பள நிலுவையை தாங்க
பேராசிரியர்கள் கூறுகையில், தேர்வு முடிவு தாமத்திற்கு நாங்கள் மட்டும் காரணமல்ல. பல்கலையும் தான். விடைத்தாள் மதிப்பீடு செய்த பின் பல பேராசிரியர்களுக்கு மதிப்பீட்டிற்கான சம்பளம் வழங்காமல் ஒவ்வொரு ஆண்டும் பல்கலை சார்பில் இழுத்தடிக்கப்படுகிறது. இதனாலும் இம்முகாமில் பேராசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. மதிப்பீடு செய்ததற்கான நிலுவை சம்பளத்தை வழங்கினாலே பேராசிரியர்கள் ஆர்வத்துடன் இப்பணிக்கு வருவர் என்றனர்.