சட்ட கல்லுாரி காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை: அரசு தகவல்
சட்ட கல்லுாரி காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை: அரசு தகவல்
UPDATED : அக் 16, 2024 12:00 AM
ADDED : அக் 16, 2024 11:11 AM
சென்னை:
அரசு சட்ட கல்லுாரிகளில் நிரந்தரமாக உதவி, இணைப் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு சட்ட கல்லுாரிகளில், காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணிக்கு நேரடி நியமனங்கள் மேற்கொள்ள உத்தரவிடக்கோரி, 2018ல் வசந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
உத்தரவு
ஆறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை, நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார்.
கடந்த விசாரணையில் சட்டக்கல்வி இயக்குனர் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகத்தில் உள்ள, 15 அரசு சட்ட கல்லுாரிகளில், அனுமதிக்கப்பட்ட 20 இணைப் பேராசிரியர் பணியிடங்களில், 19 காலியாக உள்ளன. மொத்தமுள்ள, 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 70 காலியாக உள்ளன என்று, கூறப்பட்டிருந்தது.
இதை பார்த்த நீதிபதி, அரசு சட்ட கல்லுாரிகளில், அதிக காலி பணியிடங்கள் இருப்பது விசித்திரமானது மட்டுமல்ல; துரதிருஷ்டவசமானது. காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்றால், அவற்றை மூடி விடுவது நல்லது என்றார்.
பின், காலியிடங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்புவதற்கான செயல் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க, தமிழக சட்டத்துறை செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
தள்ளிவைப்பு
இந்த வழக்கு, நேற்று நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சட்டத்துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர் நேரில் ஆஜராகியிருந்தார்.
தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அரசு சட்ட கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவது தொடர்பாக, தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் சில விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கு இன்றைக்குள் பதில் அளிக்கப்படும். பின், தேர்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும், என்றார்.
இதையடுத்து, காலி பணியிடங்களை நிரப்பாமல், தரமான சட்ட கல்வியை எப்படி வழங்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, அரசு தரப்பு விளக்கத்தை பதிவு செய்து, அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தெரிவிக்க, விசாரணையை வரும் 21ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.