நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள் தேர்வு பட்டியலில் நீக்கம் செய்ய நடவடிக்கை
நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள் தேர்வு பட்டியலில் நீக்கம் செய்ய நடவடிக்கை
UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 09:00 AM

சேலம்:
பிளஸ் 2 வகுப்பில், நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயரை, தேர்வு பட்டியலில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது. தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் பட்டியல், எமிஸ் இணையதளத்திலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. வருகை பதிவும் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யப்படுவதால்,
பள்ளிக்கு வராமல் நீண்ட விடுப்பில் இருக்கும் மாணவர்கள் பெயர் பட்டியல் தனியே தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள மாணவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள், நீண்ட விடுப்பு காரணமாக தேர்வெழுத தகுதியிழந்தவர்கள் என ஆய்வு செய்து, தேர்வர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை அனுப்புமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரை, தேர்வர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய, வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. இதனால், தேர்வெழுதாமல் ஆப்சென்ட் ஆகும் மாணவர் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருந்தது. இதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு தேர்வர் பட்டியலிலிருந்து தகுதியில்லாத மாணவர் பெயரை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.