UPDATED : மே 21, 2024 12:00 AM
ADDED : மே 21, 2024 10:07 AM

திருப்பூர்:
கோடை விடுமுறை முடிய இன்னமும், இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அட்மிஷன் சுறுசுறுப்பாகியுள்ளது.
துவக்க, நடுநிலைப்பள்ளிகள் முன் வைக்க, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு, ஆறு முதல் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், பள்ளியில் உள்ள வசதிகள் குறித்து பிளக்ஸ் போர்டு, தலைமை ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு, ரங்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டில், புத்தம் புதிய பொலிவுடன் காற்றோட்டமான வகுப்பறை, சுகாதார கழிப்பிடம், சுத்தமான குடிநீர் வசதி நம் பள்ளியில் உள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவு மற்றும் சத்துணவுத்திட்டம், அரசு பள்ளியில் பயிலும் மாணவருக்கு தொழிற்கல்வியில், 7.5 சதவீத இடஒதுக்கீடு, உயர்கல்விக்கு புதுமைப் பெண் திட்டம், அறிவுத்திறன் வளர்க்க வினாடி வினா போட்டி, வானவில் மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
2024 - 2025ம் கல்வி யாண்டுக்கான தமிழ், ஆங்கில வழி அட்மிஷன் நடக்கிறது. நமது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம்; எதிர்காலத்தை திட்டமிடுவோம்,' என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வரும் பெற்றோரை ஈர்க்க இத்தகைய முன்னெடுப்புகளை கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு பள்ளியில் மாணவரை சேர்க்க முன்வரும் பெற்றோருக்கு வழிகாட்ட ஒவ்வொரு பள்ளியிலும் இரு ஆசிரியருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளிலேயே மாணவ, மாணவியருக்கு ஆதார் கார்டு எடுத்து, வங்கிக்கணக்கு துவங்கப்படுகிறது. சாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ்களை பள்ளிகளில் பெற்றுக்கொள்ள முடியும் என்றனர்.