கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை: அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருப்பு
கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை: அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருப்பு
UPDATED : ஏப் 25, 2024 12:00 AM
ADDED : ஏப் 25, 2024 09:48 AM

கோவை:
அரசு உதவிபெறும் கல்லுாரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை குறித்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும், என கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்தார்.
கடந்த இரண்டு கல்வியாண்டுகளில், அரசு கல்லுாரிகளில் மட்டும் விண்ணப்பங்கள் பெறுதல், தரவரிசைப்பட்டியல் வெளியிடுதல், ஒற்றை சாளரமுறையில் செயல்படுத்தப்பட்டு, முதலாமாண்டு சேர்க்கை நடத்தப்பட்டது.
நடப்பாண்டு முதல் அரசு உதவிபெறும் கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளில் முழுமையாக சேர்க்கை செயல்பாடுகள் ஒற்றைசாளர முறைக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக, கல்லுாரி முதல்வர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, சிறப்பு குழுவும் நியமிக்கப்பட்டது. தேர்தல் காரணமாக சிறப்புக்குழுவின் முடிவுகள், இதுவரை வெளியிடப்படவில்லை.
அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், சேர்க்கை துவக்க அனுமதியும் வழங்கப்படாமல் உள்ளதால், குழப்பங்கள் நீடிக்கின்றன. ஒரு சில கல்லுாரிகள் சேர்க்கை நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளன.
கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வியிடம் கேட்டபோது, இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் சேர்க்கை நடத்த வேண்டாம் என முன்பே அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளோம். உதவிபெறும் கல்லுாரிகளில் உள்ள, சுயநிதி பிரிவுகளுக்கு மட்டுமே சேர்க்கை செயல்பாடுகளை துவக்கியுள்ளனர் என்றார்.