UPDATED : ஏப் 25, 2024 12:00 AM
ADDED : ஏப் 25, 2024 09:43 AM

கோவை:
பாரதியார் பல்கலையில், 58 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்து இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் அதிகாரியை உயர் பொறுப்பில் வைத்துக்கொண்டே, விசாரணை கமிட்டி கண்துடைப்பிற்காக அமைத்துள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது.
இப்பல்கலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், 58 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், துணைவேந்தர் பொறுப்பு குழு அனுமதி பெறாமலும், நிதிக்குழு அனுமதியின்றியும், விளம்பரங்கள் வெளியிடாமல் இருத்தல் என, எவ்வித விதிமுறைகளும் பின்பற்றாமல் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, 2023 டிச., மாதம் உயர்கல்வித்துறை செயலர் உத்தரவின் பேரில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் சிறப்பு குழு ஆய்வுகளை மேற்கொண்டது. இக்குழுவின் அறிக்கை இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது. ஆனால், இந்த அறிக்கையை மையமாக கொண்டு, பல்கலை பெண் அலுவலர் ஒருவர் டிச., மாதமே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விதிமுறை மீறி பணிநியமனம் பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு இதுவரை ஊதியம் விடுவிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், இம்முறைகேடு தொடர்பாக விசாரிக்க, புதிய கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, செனட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், துணைவேந்தர் பொறுப்பு குழுவில் உள்ள பல்கலையை சேர்ந்த பெண் உறுப்பினர் மீதே புகார் உள்ள சூழலில், இக்குழுவை நியமிக்க அவரது கையெழுத்தே பெறப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.
யாரை ஏமாற்ற குழு அமைக்கின்றனர் என புரியவில்லை. துணைவேந்தர் பொறுப்பில் உள்ள நபர், குற்றம் செய்தாரா இல்லையா என்ற விசாரணை, அவரை பொறுப்பில் வைத்துக்கொண்டே மேற்கொள்வது, எப்படி சரியாக இருக்க முடியும்? எந்த அலுவலரும் உண்மையை கூற தயங்கத்தான் செய்வார்கள். கோப்புகள் காணாமல் போகவும், அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணை போக்கை மாற்றவும், வாய்ப்புகள் உள்ளன என்றார்.
இதுகுறித்து, பல்கலை பதிவாளர் ரூபாவிடம் கேட்ட போது, 58 கவுரவ விரிவுரையாளர் நியமனத்தில், தவறு நடந்து இருப்பது தெரிகிறது. ஆனால், அதை ஆழமாக விசாரிக்காமல், யாரையும் குறிப்பிட இயலாது. இதுகுறித்து, விசாரணை கமிட்டி அமைத்துள்ளோம். கமிட்டி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்றார்.