விடுபட்ட மாணவர்களின் சேர்க்கை: பதிவு செய்ய அறிவுரை
விடுபட்ட மாணவர்களின் சேர்க்கை: பதிவு செய்ய அறிவுரை
UPDATED : ஏப் 02, 2024 12:00 AM
ADDED : ஏப் 02, 2024 07:13 PM
உடுமலை:
புதிய கல்வியாண்டுக்கான சேர்க்கையில் விடுபட்ட மாணவர்களை, பதிவு செய்ய கல்வித்துறை இணையதளத்தில் விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடப்பாண்டில் கல்வித்துறை கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை வழக்கமாக, மே மாதம் முதல் துவங்கும். ஆனால், அடுத்த கல்வியாண்டு 2024 - 25க்கான மாணவர் சேர்க்கை, நடப்பாண்டு மார்ச் மாதமே துவங்கிவிட்டது. பள்ளி செல்லும் வயதிலுள்ள குழந்தைகளை, நுாறு சதவீதம் அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பள்ளிகளிலும், தற்போது சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, குறிப்பாக துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை அலுவலர்கள் சிறப்பு கூட்டம் நடத்துகின்றனர். தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் நேரடியாக பள்ளிக்கு அருகிலுள்ள மாணவர்களின் பெற்றோரை அணுகி, சேர்க்கை பதிவு செய்துள்ளனர். தற்போது, இந்த சேர்க்கையின்போது விடுபட்டுள்ள மாணவர்களை பதிவு செய்வதற்கும், கல்வித்துறை இணையதளத்தில் விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில், அங்கன்வாடிகளில் பராமரிக்கப்பட்டு, 5 வயது நிறைவடைந்த, அருகிலுள்ள அரசு பள்ளியில் சேர்க்கப்படாத மாணவர்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், அவர்களுக்கான நுழைவு எண்களை பதிவிட்டு, அதில் வரும் மாணவர்களின் விபரங்கள் மற்றும் பெற்றோரின் தொலைபேசி எண்களின் வாயிலாக, அழைத்து சேர்க்கையை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில், விடுபட்ட மாணவர்களை சேர்ப்பது குறித்து, கல்வித்துறை அலுவலர்கள் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.