UPDATED : ஏப் 02, 2024 12:00 AM
ADDED : ஏப் 02, 2024 07:08 PM

திருப்பூர்:
ஆண்டு இறுதி தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப் பள்ளிகளில், பாடங்களை நடத்தி முடிப்பதில் ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஏப்., 19ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், முன்கூட்டியே இறுதியாண்டு தேர்வுகளை முடித்து, ஓட்டுச்சாவடிகளான பள்ளிகளை தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக, ஏப்ரல் மூன்று மற்றும் நான்காவது வாரம் நடத்தப்படும் இறுதியாண்டு தேர்வுகள், லோக்சபா தேர்தல் காரணமாக நடப்பாண்டு முதல் வாரமே நடத்தப்படுகிறது; ஏப்ரல், 2ம் தேதி துவங்கும் தேர்வுகள், ஏப்., 12ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது.
இதனால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கான பாடங்களை விரைந்து முடித்து, தேர்வுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்தும் பணியில் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். பள்ளி வேளை துவங்கியது முதல் பள்ளி முடியும் வரை ஓய்வின்றி தொடர்ந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு பாடப்பிரிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளிகளுக்கு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், திருப்புதல், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏப்ரல், 2 துவங்கி, 12 வரை நடக்க கூடிய தேர்வுகள் குறித்து அட்டவணை ஏற்கனவே மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு, ஆறு மற்றும் ஏழாம் வகுப்புக்கு காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரையும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு, மதியம், 2:00 முதல், மாலை, 4:00 மணி வரையும் தேர்வு நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.