மேற்கு ஆஸ்திரேலிய பல்கலை சென்னை வளாகத்துக்கு அனுமதி
மேற்கு ஆஸ்திரேலிய பல்கலை சென்னை வளாகத்துக்கு அனுமதி
UPDATED : ஜூன் 17, 2025 12:00 AM
ADDED : ஜூன் 17, 2025 03:12 PM

சென்னை:
மேற்கு ஆஸ்திரேலிய பல்கலை, சென்னையில் கல்வி வளாகம் அமைக்க யு.ஜி.சி., ஒப்புதல் வழங்கி உள்ளது.
புதிய கல்வி கொள்கையின்படி உலகத்தர வரிசையில், 100 இடங்களில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகளின் வளாகங்களை, நாட்டின் முக்கிய நகரங்களில் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு நாட்டு பல்கலைகளுக்கு, மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்ற மேற்கு ஆஸ்திரேலிய பல்கலை, தன் பாடத்திட்டம், பயிற்சி உள்ளிட்டவற்றை விளக்கி, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., யின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அதை ஆய்வு செய்த யு.ஜி.சி., மும்பை மற்றும் சென்னையில் பல்கலை வளாகம் அமைக்க, ஒப்புதல் வழங்கி உள்ளது.
வணிகம், அறிவியல், இன்ஜினியரிங், தொழில்நுட்பம், கணிதம் சார்ந்த உயர்கல்வியை, ஆஸ்திரேலிய பல்கலை வளாக சூழல் வசதிகளுடன் வழங்கும். இதில், ஆஸ்திரேலிய மாணவர்களும், இந்திய மாணவர்களும் இணைந்து கற்கும் சூழல் உருவாகும். பட்டப்படிப்புகளுக்கு, மேற்கு ஆஸ்திரேலிய பல்கலை சான்றிதழ் வழங்கப்படும்.
அத்துடன், இந்திய தொழில், வணிக சூழல்களுக்கு ஏற்ற வகையில், பாடங்களில் சில மாற்றங்களும் செய்யப்படும். அவற்றை கற்பிக்க, இந்திய பேராசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்திய பெண்களுக்கான கல்வியை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும், குறுகிய கால பட்டய படிப்புகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. சில செமஸ்டர்களுக்கு, ஆஸ்திரேலியா சென்று கற்கும் வகையிலும், பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.