தி.மு.க., ஹிந்தி எதிர்ப்பில் பங்கேற்பு; குரூப் -1 தேர்வில் சர்ச்சை கேள்வி
தி.மு.க., ஹிந்தி எதிர்ப்பில் பங்கேற்பு; குரூப் -1 தேர்வில் சர்ச்சை கேள்வி
UPDATED : ஜூன் 17, 2025 12:00 AM
ADDED : ஜூன் 17, 2025 03:16 PM

ராமேஸ்வரம்:
குரூப் -1 முதல் நிலை தேர்வில் தி.மு.க., ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றது என சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட பல துறைகளுக்கு மாவட்ட அதிகாரிகள் பதவிக்கு நேற்று முன்தினம் தமிழகத்தில் குரூப் -1 முதல் நிலை தேர்வு நடந்தது. இதனை 2.30 லட்சம் பேர் எழுதினர்.
இத்தேர்வில் பொது தமிழ், இந்தியா, உலக வரலாறு, அறிவியல், கணிதம், பொருளாதாரம், மத்திய, மாநில அரசின் திட்டங்கள், நடப்பு செய்திகள் உள்ளிட்ட பல துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இதற்காக ஓராண்டுக்கும் மேலாக இரவு, பகல் பாராமல் தேர்வர்கள் படித்து தேர்வு எழுதினர்.
இத்தேர்வில், கூற்று(ஏ):
தி.மு.க., ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. கூற்று (ஆர்) :
தி.மு.க., மக்களை தமிழர் என்ற அடையாளத்தால் ஒன்றிணைய வலியுறுத்தியது என்ற கேள்வி இருந்தது.
மத்திய அரசு அமல்படுத்திய ஹிந்தி ஆதரவு திட்டத்தை தி.மு.க., வினர் எதிர்த்து போராட்டம் செய்து மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டதால் போலீசார் கைது செய்தனர். இதனை சாதனை போல் கூறி குரூப் -1 தேர்வில் கேள்வியாக இருந்தது தேர்வர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பழமையான அரசியல் கட்சிகளை தோற்றுவித்த ஆண்டு, அதன் தலைவர்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., போராட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டி உயர் பதவிக்கான தேர்வில் கேள்வி கேட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.