UPDATED : மே 30, 2025 12:00 AM
ADDED : மே 30, 2025 09:37 AM
உடுமலை:
அரசு பள்ளிகளில் மேல்நிலை முடித்த மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிந்து, தற்போது மாணவர்கள் அடுத்தகட்ட உயர்கல்வியை தேர்ந்தெடுக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அரசு கல்லுாரிகளில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, திருப்பூர், பகுதிகளில் அரசு கல்லுாரிகள் உள்ளன. தற்போது அரசு கல்லுாரிகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கல்லுாரிகளில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு, அடுத்தகட்ட ஆலோசனை வழங்குவதற்கும், அவர்களை உயர்கல்வியில் கட்டாயம் சேர்ப்பதற்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள், தற்போது உயர்கல்வியில் சேர்வதற்கு என்ன வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர் என்பதை கேட்டறிந்து வருகிறோம்.
மேலும், அரசு கல்லுாரிகளில் சேர்க்கைக்கு வாய்ப்பு குறைவாக இருக்கும் மாணவர்களுக்கு, மற்ற கல்லுாரிகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் படித்த மாணவர்களின், உயர்கல்வி நிலை குறித்து கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இவ்வாறு, கூறினர்.

