UPDATED : மே 30, 2025 12:00 AM
ADDED : மே 30, 2025 09:37 AM
ஓமலுார்:
சேலம் பெரியார் பல்கலையின், 8வது துணைவேந்தராக இருந்த ஜெகநாதனின் ஓராண்டு பதவி நீட்டிப்பு காலம் கடந்த, 19ல் நிறைவு பெற்றது. தொடர்ந்து பல்கலையின் தமிழ் துறைத்தலைவர் பெரியசாமி, பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரை நீக்கக்கோரி, பல்கலை தொழிலாளர் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று பெரியார் பல்கலையில் சிறப்பு ஆட்சி குழு கூட்டம் நடந்தது. அதில், 21 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஆன்லைன் மூலம் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நிர்வாக பணிகளை கவனிக்கும் பொருட்டு, அரசு கல்லுாரி கல்வித்துறை இயக்குனர் சுந்தரவல்லி தலைமையில் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக, பல்கலையின் இதழியல் துறை பேராசிரியர் சுப்பிரமணி, சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரி முதல்வர் ஜெயந்தி அடங்கிய, 3 பேர் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.

