UPDATED : செப் 13, 2025 12:00 AM
ADDED : செப் 13, 2025 08:34 AM
கோவை:
பள்ளி மாணவர்கள் இடையே, ஜாதி வேறுபாடுகளை துாண்டும் எவ்வித நடவடிக்கைகளும் இடம்பெறாமல் இருக்கவும், மாணவர்கள் இடையே சமத்துவம், சமூக நீதி, ஒற்றுமை ஆகிய எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களிடம் வகுப்புவாதம் அல்லது ஜாதிய எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையில், ஆசிரியர்கள் நடந்து கொண்டால், அவர்களை பற்றி வரும் புகார்களை முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக விசாரிக்க வேண்டும்.
புகார் உறுதியானால், சம்பந்தப்பட்ட ஆசிரியரை அப்பள்ளியில் தொடர்ச்சியாக பணியாற்ற விடாமல், உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் அனைவரும் சமமாகக் கருதப்படும் சூழல் உருவாகும் என்றும், கல்வி நிலையங்களில் ஜாதி சார்ந்த பாகுபாடு தடுக்கப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

