UPDATED : ஜன 06, 2026 07:15 PM
ADDED : ஜன 06, 2026 07:17 PM

மேட்டுப்பாளையம்:
வெளிநாடுகளில் சாப்ட்வேர் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும். அங்கு சில போலி நிறுவனங்கள், இளைஞர்களை சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுத்துகின்றனர் என போலீசார் எச்சரிக்கின்றனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான லாவோஸ், கம்போடியாவில் கை நிறைய சம்பளத்துடன் சாப்ட்வேர் வேலை என நம்பி செல்லும் இளைஞர்கள், அங்கு 'சைபர்' கொத்தடிமைகளாக பயன்படுத்தப்படுகின்றனர்.
அண்மையில், கோவை செல்வபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அவர் அதில் இருந்து தப்பிக்க முடியாமல் மர்ம மரணம் அடைந்தார்.
இதுபோன்று இந்தியா முழுவதும் இளைஞர்கள் பலர் இந்த நாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாஸ்கர் கூறுகையில், “சில போலி ஏஜன்ட்கள் வாயிலாக வெளிநாடுகளுக்கு இளைஞர்கள் வேலைக்குச் அழைத்து செல்லப்படுகின்றனர்.
அங்கு சென்றதும் முதலில் அவர்களது பாஸ்போர்ட்களை, சைபர் கிரைம் மோசடி கும்பல்கள் பறிமுதல் செய்துவிடுகின்றனர். பின், அவர்களை வைத்து பல்வேறு சைபர் மோசடிகளை அரங்கேற்றுகின்றனர்.
இளைஞர் இதுபோன்ற வேலைக்கு செல்லும் முன் அந்த நிறுவனத்தின் உண்மை தன்மையை அறிந்துக்கொள்ள வேண்டும். மேட்டுப்பாளையம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, சிறுமுகை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.

