மாணவர்களின் திறமையை வெளிக்கொணர ஏ.ஐ., கல்வி கருத்தரங்கில் ஆலோசனை
மாணவர்களின் திறமையை வெளிக்கொணர ஏ.ஐ., கல்வி கருத்தரங்கில் ஆலோசனை
UPDATED : செப் 09, 2024 12:00 AM
ADDED : செப் 09, 2024 08:28 AM

திருப்பூர்:
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் வாயிலாக மாணவர்களின் அறிவு, திறமையை வெளிக்கொணர அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் பணிபுரியும் என்.எஸ்.எஸ்., மற்றும் சூழல் கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற, குப்பையில்லா பள்ளி என்ற தலைப்பிலான கருத்தரங்கம், ஏ.வி.பி., பெண்கள் கல்லுாரியில் நடந்தது.
திருப்பூர் மாநகராட்சி மற்றும் துப்புரவாளன் அமைப்பினர் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், திருப்பூரை காப்போம் அமைப்பின் நிறுவனர், திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆலோசகர் டாக்டர் வீரபத்மன் பேசியதாவது;
கழிவு மேலாண்மை என்பது தற்போதைய சூழலில் பெரும் சவால் நிறைந்த பணியாக மாறியிருக்கிறது. பள்ளிகளை பொறுத்தவரை காகித குப்பை, பாலிதின் ஆகியவை தான் அதிகளவில் சேரும்.
அவற்றை தரம் பிரித்து, மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையிலான நடவடிக்கையை பள்ளி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள மரங்கள் மற்றும் இயற்கை வளங்களை சேதப்படுத்தாமல் இருக்க, உரிய அறிவுரை, ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.மாணவ, மாணவியருக்கு பருவ வயது பிரச்னை தொடர்பான உளவியல் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
மாணவர்கள், தங்கள் வாழ்க்கையில் முழுமையான வளர்ச்சி பெற ஆசிரியர்கள் உதவ வேண்டும். ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது; தற் போதைய காலகட்டத்தில் மாணவ, மாணவியர் சுறுசுறுப்பு நிறைந்தவர்களாக உள்ளனர்.செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் வாயிலாக மாணவர்களின் அறிவு, திறமையை வெளிக்கொணர அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.