மண் வளம் பெருக்கும் பசுந்தாள் உரம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை
மண் வளம் பெருக்கும் பசுந்தாள் உரம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை
UPDATED : ஜன 31, 2026 11:11 AM
ADDED : ஜன 31, 2026 11:12 AM

உடுமலை: மண்ணிலுள்ள அங்கக கரிமங்களை நிலைநிறுத்தி, நிலத்தின் வளத்தை பாதுகாத்து பயிர் வளர்ச்சியை பெருக்க, பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும், என விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
மண்ணிலுள்ள உயிர்சத்துகள் மற்றும் கரிமங்கள், ரசாயன உரங்கள் பயன்பாடு, வறட்சி உட்பட பல்வேறு காரணங்களால் மண் வளம் குறைந்துள்ளன.
இதனால், சாகுபடியில், விளைச்சல் வெகுவாக குறைகிறது. தண்ணீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விளைச்சல் குறைவு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், மண்ணில் அங்கக கரிமங்கள் மற்றும் உயிர் சத்துகளை உயிர்ப்பித்து விளைச்சலை அதிகரிக்க, பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்ய வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
மண்வளத்தை பெருக்க கரிம அளவு முக்கிய பங்கு வகிக்கிறது. தழைச்சத்துகளில் அதிகளவில் கரிம சத்துகள் உள்ளதால், பயிர்கள் சாகுபடிக்கு முன் பசுந்தாள் உரங்களை பயிரிட்டு, உழவு செய்ய வேண்டும். அதன் பின் சாகுபடி செய்யும் எந்த பயிருக்கும், தொழுஉரம் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
தக்கை பூண்டு, சணப்பை, கொழுஞ்சி மற்றும் மணிலா அகத்தி உட்பட பல்வேறு வகையான பசுந்தாள் உரப்பயிர்கள் உள்ளன.
இவற்றை, ஏக்கருக்கு, 10 கிலோ விதைகள் வீதம் விதைத்து, செடிகள் நன்கு வளர்ந்து பூக்கும் பருவத்தில், நிலத்துடன் மடக்கி உழவு செய்துவிட வேண்டும்.
பசுந்தாள் உரங்களில் தழைச்சத்துகள் அதிகளவில் காணப்படுவதால், மண்ணிலுள்ள கரிம அளவு உயர்ந்து மண்புழுக்களும் உற்பத்தியாகிறது.
இதனால், மண்ணின் அடர்த்தி குறைந்து உழவு ஓட்டுவது முதல், சாகுபடிக்கான அனைத்து பணிகளும் சுலபமாகி, கூலி ஆட்களின் தேவையும் குறைந்து, செலவும் கணிசமாக குறைகிறது.
இதனால், நிலத்தில் தண்ணீரும் நிலை நிறுத்தப்பட்டும், சிக்கனமாக பாய்ச்சினால் போதுமானதாகும்.
பசுந்தாள் உரப்பயிர்களின் வளர்ச்சிக்கு அதிகளவு தண்ணீர் தேவையில்லை என்பதால், தெளிப்பான் வாயிலாக, வாரத்துக்கு ஒரு நாள் பாய்ச்சினால் போதுமானதாகும்.
சாகுபடி செய்யப்பட்டு, மடக்கி உழப்படும், பசுந்தாள் உரங்கள் மக்கும் போது சிறந்த இயற்கை உரமாக மாறுகிறது. இதனால், மற்ற பயிர்கள் சாகுபடியின் போது உரம் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளலாம்.
தேவையற்ற செலவுகள் குறைவதால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது.
பசுந்தாள் உரம் சாகுபடிக்கு, பெரியளவு பராமரிப்பு மற்றும் செலவு தேவையில்லை என்பதால் விவசாயிகள், பசுந்தாள் உரம் சாகுபடியை, பிரதான பயிர் சாகுபடிக்கு ஒரு மாதத்துக்கு முன் நடவு செய்து, மடக்கி உழவு ஓட்டி விட வேண்டும்.
இவ்வாறு, வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

