சமூக ஊடகங்களின் தாக்கத்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்பு
சமூக ஊடகங்களின் தாக்கத்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்பு
UPDATED : ஜன 31, 2026 11:05 AM
ADDED : ஜன 31, 2026 11:11 AM

ராமநாதபுரம்: 'சமூக ஊடகங்களில் வருபவர்களை குழந்தைகள் தொடர்ந்து பார்ப்பதால் அவர்களின் எதிர் காலம் பாதிக்கப்படும்,' என பேச்சாளர் ராமகிருஷ்ணன் பேசினார்.
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம், கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா பிப்.,4 வரை நடக்கிறது.
இதில் 80 உள் அரங்குகள், அரசின் பல் வேறுதுறை சார்ந்த கண்காட்சிகள், கைவினைப் பொருட்கள் கடைகள், பயிற்சி பட்டறை, கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
புத்தகங்களை 10 சதவீதம் தள்ளுபடி விலையில் இங்கு வாங்கலாம். இந்திய மருத்துவம், ஓமியோபதி சார்பில் அமைக்கப்பட்ட மூலிகை கண்காட்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
'கதை, விதை, கவிதை' என்ற தலைப்பில் பேச்சாளர் வெ.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
உலகையும், மனிதர்களையும் புத்தகங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். திருக்குறள், கம்ப ராமாயணம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் உலக அளவில் பிரபலமடைந்துள்ளது.
அவற்றை தமிழர்கள் அறிவது அவசியம். குழந்தைகளுக்கும் தமிழ் மொழி வழியாக வாழ்வியல், அறத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் போது தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்களை வாங்கிச் செல்ல வேண்டும்.
அதன் மூலம் சிலரின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நிகழலாம். குழந்தைகளுக்கு நாட்டின் வளர்ச்சிக்காக போராடியவர்களின் வரலாற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். சமூக ஊடகங்களில் வருபவர்களை குழந்தைகள் தொடர்ந்து பார்ப்பதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
இன்றைக்கு குழந்தைகள் யாரை தனது முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறார்களோ, அவர்கள் போல் தான் எதிர்காலத்தில் வருவார்கள். அதனால் விளையாட்டு, அறிவியல், சமூகம் சார்ந்து சாதித்தவர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.

