வேளாண், கிராமப்புற வளர்ச்சி நிதி ஒதுக்கீடுக்கு வரவேற்பு நகர்புறம், கல்வித்துறைக்கு போதிய அளவில் இல்லை
வேளாண், கிராமப்புற வளர்ச்சி நிதி ஒதுக்கீடுக்கு வரவேற்பு நகர்புறம், கல்வித்துறைக்கு போதிய அளவில் இல்லை
UPDATED : பிப் 03, 2025 12:00 AM
ADDED : பிப் 03, 2025 07:39 AM

சேலம்:
மத்திய பட்ஜெட்டில் வேளாண், கிராமப்புற வளர்ச்சி நிதி ஒதுக்கீடுக்கு வரவேற்பு தெரிவித்த நிலையில், நகர்புற வளர்ச்சி, கல்வித்துறைக்கு போதுமானதாக இல்லை என்றும், அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு அதிகரிப்புக்கு எதிர்ப்பும் தெரிவித்து, சேலம் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் நேற்று, 2025 - 26 நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதுகுறித்து சேலம் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் விபரம் வருமாறு:
நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்
ஆடிட்டர் எ.எஸ்.கவுரி: பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு, 7 லட்சத்தில் இருந்து, 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டதால், நடுத்தர, மாத சம்பளம் பெறுவோர் பயன்பெறுவர். வருமானம், 12 லட்ச ரூபாயை தாண்டினால் செலுத்தப்படும் வருமான வரிக்கும் புது, ஸ்லாப் விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான படிவங்கள் தாக்கல் செய்வதை ஊக்கப்படுத்த, தாமதமாக தாக்கல் செய்வதற்கான கெடு, 2 ஆண்டில் இருந்து, 4 ஆண்டாக உயர்த்தியதும், கிசான் கடன் அட்டை மூலம் வழங்கப்படும் கடன் உச்சவரம்பு, 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக அதிகரித்திருப்பதும், நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பட்ஜெட் பாராட்டத்தக்கது.
நிரந்தர தீர்வு கிடைக்கும்
சேலம் மாநகர தாவர எண்ணெய் வணிகர் சங்கத்தலைவர் எம்.சந்திரதாசன்: எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க தனி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காய்கறி, பழங்கள் உற்பத்தியை பெருக்க, தேவையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு, 1,71,437 கோடி ரூபாய், கிராமப்புற வளர்ச்சிக்கு, 2,66,817 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சீனியர் சிட்டிசனுக்கு, வட்டி ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை விலக்கு, வாடகை வருவாய் ஆண்டுக்கு, 6 லட்சம் ரூபாய் வரை பிடித்தம் செய்வதில் இருந்து விலக்கு அளித்திருப்பது நல்ல விஷயம். வருமான வரி சட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
ஜி.எஸ்.டி., குறைக்க வேண்டும்
சேலம் சிவில் இன்ஜினியர் அசோசியேஷன், முதல் உதவி தலைவர் எஸ்.சுபாஷ்: ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் வரையான வருமானத்துக்கு வரி இல்லை என்பது, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும். ஒவ்வொரு தொழிலுக்கும் மாறுபடும், ஜி.எஸ்.டி.,யை, ஒற்றைச்சாளர முறைக்கு கொண்டு வர வேண்டும். தற்போது புது வீடு கட்டி விற்கும்போது, லாபத்தில் செலுத்தப்படும், 30 சதவீத ஜி.எஸ்.டி.,யை, 10 சதவீதமாக குறைத்தால், கட்டுமான தொழில் மேம்படும். நகர்புற வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள, 96,777 கோடி ரூபாய் நிதி போதாது. அந்நிய நேரடி முதலீடு உச்ச வரம்பு, 100 சதவீதம் அதிகரித்திருப்பது ஏற்புடையதல்ல.
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பட்டாசு வியாபாரிகள் சங்க செய்தித்தொடர்பாளர் எம்.சங்கர்: மின்சார வாகனங்கள், மொபைல் போன் பேட்டரி உற்பத்திக்கு வரிச்சலுகையால், அதன் விலைகள் குறைந்து பயன்பாடு அதிகரிக்கும். புது ஏற்றுமதி ஊக்குவிப்பு வாரியம் அமைக்கப்படுவதால், தொழில் வளர்ச்சிக்கு வித்திடும்.
இந்திய அஞ்சல்துறை மிகப்பெரிய, லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு, சிறு, குறு நிறுவன கடன் உச்சவரம்பு, 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.
மலிவு விலையில் மருந்து
மருத்துவ நிபுணர் எம்.கே.செல்வகளஞ்சியம்: உயிர்காக்கும், 37 வகை மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும். மருத்துவ படிப்புக்கு கூடுதலாக, 10,000 இடங்கள் உருவாக்கப்படுவதோடு, மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துவது, அந்நோய் பாதிப்பை தடுத்து, பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு பயன் கிடைக்கும்.
சுகாதாரம், வேளாண் உள்பட, 3 துறைகளில், ஏ.ஐ., மையம் அமைப்பது, மேம்படுத்தப்பட்ட புது வளர்ச்சி எனலாம்.