UPDATED : பிப் 03, 2025 12:00 AM
ADDED : பிப் 03, 2025 07:40 AM

கோவை:
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 3ல் துவங்குகிறது. செய்முறை தேர்வுகளை நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை முடிக்க தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் அறிவுறுத்தலில், மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஜரூராகியுள்ளது.
வரும், 7 முதல், 22ம் தேதி வரை பள்ளிகளில் உள்ள அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், டைப் ரைட்டிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட நாட்களுக்கு செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக பள்ளி ஆய்வகங்கள், கணினி அறை உள்ளிட்டவற்றை தயார்படுத்தும் பணி துவங்கியுள்ளது. தேர்வுக்கு ஒரு நாள் முன்பாக பள்ளியில் மின்பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக பிளஸ், 2 செய்முறை தேர்வு துவங்குகிறது. இத்தேர்வு முடிந்தவுடன் பிளஸ் 1 செய்முறைத் தேர்வு பிப்., 14க்கு பின் துவங்கும்.
பத்தாம் வகுப்புக்கு எப்போது?
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் செய்முறைத்தேர்வு நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு மார்ச், 28ம் தேதி துவங்க உள்ள நிலையில், பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத்தேர்வு பிப்., 22 முதல், 28 க்குள் நடத்தி முடித்து, விபரங்களை சமர்ப்பிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.