சென்னை ஐஐடி-ல் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம்
சென்னை ஐஐடி-ல் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம்
UPDATED : பிப் 03, 2025 12:00 AM
ADDED : பிப் 03, 2025 05:08 PM

சென்னை:
இந்திய மார்பகப் புற்றுநோய் மரபணு வரிசை உருவாக்கம் நிறைவடைந்ததாக அறிவித்த சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி, பாரத் புற்றுநோய் மரபணு வரைபடத்தை இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று வெளியிட்டார்.
சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி கூறுகையில், அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற சமூகத்திற்கான உறுதிப்பாட்டில் உண்மையாக உள்ள நாங்கள், மூளைத் தரவுகளைத் தொடர்ந்து இக்கல்வியாண்டில் இரண்டாவதாக புற்றுநோய் மரபணு தரவுகளை வெளியிடுகிறோம். இதன்மூலம் இக்கொடியநோய்க்கு வழிவகுக்கும் காரணங்கள் பற்றிய ஆழமான நுண்ணறிவு பெறப்படும் என்றும், ஆரம்பகட்டத்திலேயே தடுத்து நிறுத்த உதவும் என்றும் நம்புகிறோம், என்றார்.
சென்னை ஐஐடி புற்றுநோய் மரபியல் மற்றும் மூலக்கூறு சிகிச்சைக்கான உயர் சிறப்புமையத்தின் தலைவரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் மகாலிங்கம் கூறுகையில், இந்தியாவில் புற்றுநோய் சார்ந்த பயோமேக்கர்களை அடையாளம் காண இந்ததரவுத் தளம் விலைமதிப்பற்ற ஆதாரமாக இருக்கும். மார்பகப் புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிய இது உதவும், என்றார்.
குறைந்த செலவில் புற்றுநோயைக் குணப்படுத்தும் இடைநிலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்காக சென்னை ஐஐடி மற்றும் கார்கினோஸ் ஹெல்த்கேர் இணைந்து, புற்றுநோய்க்கான தேசிய துல்லிய மருத்துவமையத்தின் கீழ் இந்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் வெளிப்படையாக அணுகக் கூடிய வகையில் bcga.iitm.ac.in என்ற தரவுத்தளத்தை சென்னை ஐஐடி ஏற்படுத்தியுள்ளது.