இயற்கை விவசாய தொழில்நுட்ப பயிற்சி: வேளாண் மாணவியர் பங்கேற்பு
இயற்கை விவசாய தொழில்நுட்ப பயிற்சி: வேளாண் மாணவியர் பங்கேற்பு
UPDATED : நவ 14, 2026 01:43 PM
ADDED : நவ 14, 2026 01:44 PM
ஆனைமலை:
ஆனைமலை அருகே, காலநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய இயற்கை விவசாய தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.
கம்பாலபட்டி அருகே, அரசூர் வேளாண் கூட்டுறவு வங்கியில், ஆனைமலை வேளாண் துறையின் 'அட்மா' திட்டத்தின் சார்பில், கால நிலை மாற்றத்தை தாங்க கூடிய இயற்கை விவசாயம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.
அதில், வாணவராயர் வேளாண் கல்லுாரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவியர், பங்கேற்று செயல் விளக்கம் அளித்தனர்.
பயிற்சியின் ஒரு பகுதியாக, மாணவியர், பூஜ்ஜிய ஆற்றல் குளிரூட்டும் அறை அமைப்பது மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
பூஜ்ஜிய ஆற்றல் குளிரூட்டும் அறை என்பது மின்சாரமின்றி இயற்கையின் ஆவியாதல், குளிர்வித்தல் முறையை பயன்படுத்தி, பழங்கள் மற்றும் காய்கறிகளை நீண்ட நாட்களுக்கு புத்துணர்ச்சியுடன் பாதுகாக்க உதவும் எளிய தொழில்நுட்பமாகும் என விளக்கப்பட்டது.
மாணவியர் கூறியதாவது:
முதலில் தரையில் குழி தோண்டி, அதில் இரட்டை அடுக்கு செங்கல் சுவர்கள் அமைக்கப்படுகின்றன. அதன்பின், இரண்டு சுவர்களுக்கு இடையில் மணல் நிரப்பப்படுகிறது.
அந்த மணலைத் தொடர்ந்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க தண்ணீர் தெளிக்கப்படுகிறது. அதன் மேற்பகுதி ஈரமான சாக்கு துணியால் மூடப்படுகிறது. இதன் உள்ளே பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைக்கலாம்.
மணலில் உள்ள நீர் ஆவியாகும் போது, சுற்றுப்புறத்தில் இருந்து வெப்பம் உறிஞ்சப்படுகிறது. இதனால், அறையின் உட்புற வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும். இந்த இயற்கையான குளிர்வித்தல் முறையானது பழங்கள், காய்கறிகளின் தரம், புத்துணர்ச்சி, சேமிப்புகாலத்தை மேம்படுத்த உதவுகிறது.
இவ்வாறு, கூறினர்.
தொடர்ந்து செயல்விளக்கத்தின் வாயிலாக, குறைந்த செலவில் மின்சாரமின்றி விவசாய பொருட்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், இயற்கை சார்ந்த வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
அதில், கம்பாலபட்டி, கரியாஞ்செட்டிபாளையம், பில்சின்னாம்பாளையம், ஜல்லிப்பட்டி கிராம விவசாயிகள் பங்கேற்றனர்.
