மலர்களில் இருந்து இயற்கை நிறமி தயாரிக்கிறது வேளாண் பல்கலை!
மலர்களில் இருந்து இயற்கை நிறமி தயாரிக்கிறது வேளாண் பல்கலை!
UPDATED : ஆக 22, 2025 12:00 AM
ADDED : ஆக 22, 2025 08:47 AM

கோவை:
மலர்களில் இருந்து உணவுகளுக்கு வண்ணமேற்றுவதற்கான இயற்கை நிறமூட்டிகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் மலரியல் துறை உருவாக்கியுள்ளது. தொழில்முனைவோர்க்கு பயிற்சி அளிக்கவும் மலரியல் துறை தயாராக உள்ளது.
மலரியல் மற்றும் நில எழிலுாட்டும் துறை இணை பேராசிரியர் தாமரை செல்வி கூறியதாவது:
மலர்களில் இருந்து உணவு சார்ந்து மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளன. செம்பருத்தி, ரோஜா உள்ளிட்டவற்றை நேரடியாக உண்ண முடியும்.
மலர்களில் இருந்து நிறமிகளைப் பிரித்தெடுத்து, உணவுப் பொருட்களில் இயற்கை நிறமூட்டிகளாக பயன்படுத்தலாம். ரோஜாவில் இருந்து உணவுப்பொருட்களுக்கான இயற்கை நிறமூட்டியை வேளாண் பல்கலை மேம்படுத்தியுள்ளது.
தற்போது, செம்பருத்தியில் இருந்து சிவப்பு நிறமூட்டியை உருவாக்கியுள்ளோம். செம்பருத்தி டைப் 2 நீரிழிவு, இதயம் சார்ந்த நாட்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்கும் திறன் கொண்டது. மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
செண்டுமல்லி, சங்குப்பூ, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகியவற்றில் இருந்தும் நிறமூட்டிகள் உருவாக்கியுள்ளோம். எனினும், அவை 'கிளினிகல் டிரையல்' ஆய்வு நிலையில் உள்ளன.
செயற்கை நிறமியைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கு இது வரப்பிரசாதம். இயற்கை நிறமூட்டிகளுக்கு வரவேற்பும், தேவையும் அதிகமாக உள்ளது. உணவுக்கான இயற்கை நிறமூட்டிகளை பவுடர், திரவம் என இரு வகைகளிலும் தயாரிக்கலாம். இதற்கான தொழில்நுட்பத்தை வேளாண் பல்கலை மலரியல் துறை உருவாக்கியுள்ளது. இதுகுறித்த பயிற்சியை வழங்க மலரியல் துறை தயாராக உள்ளது.
உணவுக்கான இயற்கை நிறமூட்டிகளைத் தயாரித்து உள்நாட்டுச் சந்தைகளில் விற்பனை செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
இவ்வாறு தாமரை செல்வி கூறினார்.
ஜூஸ் தயாரிக்கலாம்
மலர்களில் ஷாம்பூ, ஹேர்வாஷ் பவுடர் போன்றவற்றையும் தயாரிக்கலாம். சில வகை மலர்களில் இருந்து 'சிரப்' தயாரித்து உணவாகப் பயன்படுத்த முடியும். அதற்கான தொழில்நுட்பத்தையும் பயிற்றுவிக்க மலரியல் துறை தயாராக உள்ளது.

