UPDATED : ஆக 15, 2024 12:00 AM
ADDED : ஆக 15, 2024 10:41 AM
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு, பல்கலை அரங்கில் நடந்தது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று உறுதிமொழியை வாசிக்க, மாநில அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஒன்று சேர உறுதிமொழியேற்றனர்.
இதில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், உறுதிமொழி என்பதை மேம்போக்காக அல்லாமல், மனதார ஏற்க வேண்டும். போதை என்பது தனிப்பட்ட நபரின் பிரச்னை இதுவல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்னை. அனைவரும் ஒருங்கிணைந்து ஒழிக்கவேண்டும், என்றார்.
கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில், இளைஞர்கள் மத்தியில் காணப்படும் போதை பழக்கம், பெரிய சவால் ஆக உள்ளது. சிறியதாக ஆரம்பிக்கும் பழக்கம், மொத்தமாக நம்மை அழித்துவிடும். இதுபோன்ற செயல்பாடுகள் தெரிந்தால், உடனடியாக புகார் அளிக்கவேண்டும், என்றார்.
இந்நிகழ்வில், வேளாண் பல்கலை மாணவர்கள் அனைவரும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். இதில், எம்.பி., ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, துணைவேந்தர் கீதாலட்சுமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.