ஏ.ஐ., வந்துருச்சு, வேலை போயிடுமா.. என்ன நினைக்கிறார்கள் இளைஞர்கள்?
ஏ.ஐ., வந்துருச்சு, வேலை போயிடுமா.. என்ன நினைக்கிறார்கள் இளைஞர்கள்?
UPDATED : செப் 25, 2026 06:21 PM
ADDED : செப் 25, 2026 06:24 PM
கோவை:
'செயற்கை நுண்ணறிவு' எனப்படும் ஏ.ஐ, தற்போது வெறும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் எந்திரமாக இல்லாமல், பல வேலைகளையும் தானாக செய்து முடிக்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறது.
அந்த வரிசையில், ஓபன் ஏ.ஐ., நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள ‛ஜி.பி.டி., 6 ஆஸ்ட்ரா', கம்ப்யூட்டரை பயன்படுத்துவது, கோடிங், ரிசர்ச், பைல்ஸ் தயாரிப்பது என சிக்கலான வேலைகளை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் டெக்னாலஜி வளர்ச்சி என வரவேற்கப்பட்டாலும், மறுபக்கம் இதனால் தங்களுடைய வேலைக்கு என்ன ஆகுமோ என்ற அச்சமும் இளைஞர்களிடம் உருவாகியுள்ளது. குறிப்பாக டெவலப்பர், டிசைனர், கன்டென்ட் கிரியேட்டர் போன்ற துறைகளில் இந்த அச்சம் அதிகமாக உள்ளது. அவர்களில் சிலரிடம் பேசினோம்.
'வேலை பறிபோகாது, ஆனால் ஏ.ஐ.,யால் ஆட்களின் எண்ணிக்கை குறையும்' என்கிறார் டெவலப்பர் ரெணி.
ஏ.ஐ., வந்தாலும், பழைய செயலிகள், டேட்டா பாதுகாப்பு போன்ற விஷயங்களில் மனிதர்களின் தேவை தொடர்ந்து இருக்கும், அதே நேரத்தில், 30 பேர் செய்யும் வேலையை 10 பேர் செய்யும் நிலை வரலாம் என்றார். திறமைகளை வளர்த்துக்கொள்பவர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்ந்து இருக்கும் என்பது அவரது கருத்து.
ஆனால், டிசைனரின் பார்வை வேறாக உள்ளது. 'ஏ.ஐ.,யால் பாதிப்பு 100 சதவீதம் இருக்கிறது' என்கிறார் கிராபிக் டிசைனர் ஜெய்.
டிசைனர்கள் ஏ.ஐ.,யை தவிர்க்காமல், அதை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும், என்கிறார். ஒரு குறிப்பிட்ட டிசைன் உருவாக்க ஏ.ஐ.,க்கு சரியான 'ப்ராம்ப்ட்' கொடுக்கவும், வந்த டிசைன்யை தங்களுடைய தேவைக்கு ஏற்ப மாற்றவும் டிசைனிங் அறிவு அவசியம் என்கிறார்.
முன்பு 4 பேர் செய்த வேலையை, தற்போது ஏ.ஐ., உதவியுடன் 2 பேர் சிறப்பாக செய்து முடிக்கும் நிலை வந்துவிட்டதாக கூறுகிறார். 'டிசைனிங் கோர்ஸ் படித்தது வீண் என்று சொல்ல மாட்டேன்; ஆனால் அந்த அறிவை ஏ.ஐ.,யுடன் சேர்த்து பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்' என்று தன் கருத்தை விளக்குகிறார்.
'சாட் ஜி.பி.டி., வந்தபோதே எங்கள் வேலை போய்விட்டது' என்கிறார் கன்டென்ட் கிரியேட்டர் மரகதம்.
ஒரு வீடியோவுக்கு தேவையான ஸ்கிரிப்ட், 'ஷூக்' போன்றவற்றையும் ஏ.ஐ., தற்போது கொடுத்து விடுவதால், கன்டென்ட் கிரியேட்டர்களின் தேவை குறைந்து வருவதாக அவர் கூறுகிறார். மீடியாவில் உள்ள பிரபலமான நிறுவனங்கள் ஏ.ஐ., நுட்பத்தை மேலும் மேலும் அதிக அளவில் பயன்படுத்துவதால், அங்கு கன்டென்ட் கிரியேட்டர்களின் வேலை கணிசமாக குறைந்துவிட்டது.
ஆனால், பொய் செய்தி, போலி வீடியோ போன்றவற்ரின் தாக்கம் அதிகரிப்பதால், கன்டென்ட் சூப்பர்வைசர் வேலைக்கு தேவை உயர்ந்துள்ளது; கிரியேட்டர்கள் அதன் மூலம் பலன் அடையலாம் என ஒரு வழி காட்டுகிறார்.
இப்படி, 'வேலைகளை ஏ.ஐ., முழுமையாக பறித்துவிடுமா?' என்ற கேள்விக்கு தெளிவான பதிலை யாராலும் சொல்ல இயலவில்லை. ஆனால், இதுவரை இருந்ததை காட்டிலும் குறைந்த ஆட்களை வைத்தே ஏ.ஐ., துணையுடன் வேலைகளை முடிக்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டதை இளைஞர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
