உலக நாடுகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய ஏ.ஐ., உச்சி மாநாடு: பிரதமர் மோடி
உலக நாடுகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய ஏ.ஐ., உச்சி மாநாடு: பிரதமர் மோடி
UPDATED : பிப் 23, 2026 03:27 PM
ADDED : பிப் 23, 2026 03:31 PM
புதுடில்லி:
“ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆற்றலை, உலக நாடுகள் பயன்படுத்தும் விதத்தை மாற்றி அமைக்கும் அளவுக்கு, நாம் நடத்திய ஏ.ஐ., உச்சி மாநாடு திருப்பு முனையாக அமைந்தது,” என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
'மன் கீ பாத்' எனப்படும் மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம், பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
சாதனை
அந்த வகையில் நேற்று ஒலிபரப்பான நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடந்த ஏ.ஐ., தாக்க உச்சி மாநாட்டில், நம் நாட்டின் சாதனைகளை கண்டு உலக நாடுகளின் தலைவர்கள் வியந்து போயினர்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழில் ஜாம்பவான்கள், புத்தாக்க வல்லுநர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் என, பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றனர்.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் ஆற்றலை, எதிர்காலத்தில் இந்த உலகம் எப்படி பயன்படுத்தப் போகிறது என்பதற்கான பாதையை டில்லி ஏ.ஐ., உச்சி மாநாடு வகுத்து கொடுத்து, திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநாட்டில் இரு விஷயங்களை கண்டு, உலக நாடுகளின் தலைவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
முதலாவது, கண்காட்சி அரங்கில் இடம் பெற்றிருந்த அமுல் அரங்கம். இங்கு ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் கால்நடைகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என விளக்கப்பட்டது. 24 மணி நேரமும் கால்நடைகளை கண்காணிக்க, விவசாயிகளுக்கு இந்த தொழில்நுட்பம் எப்படி உதவுகிறது என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
இரண்டாவது விஷயம் நம் கலாசாரத்தை பற்றியது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் உதவியுடன் நம் பழங்கால ஓலைச்சுவடிகள், கையெழுத்து பிரதிகள், ஞானம் ஆகியவற்றை இன்றைய தலை முறைக்கு ஏற்ப எப்படி பாதுகாத்து வருகிறோம் என்பதை கண்டு வியப்படைந்தனர்.
டிஜிட்டல் கைது
டிஜிட்டல் கைது மற்றும் டிஜிட்டல் மோசடிகளால் மூத்த குடிமக்களும், அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய மோசடிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சில நேரங்களில், வங்கிகளிடம் இருந்து கே.ஒய்.சி., எனப்படும் வாடிக்கையாளர் விபரங்களை புதுப்பிக்கும்படி குறுஞ்செய்தி வரும்.
அதை கண்டு, டிஜிட்டல் மோசடியாக இருக்குமோ என அஞ்ச வேண்டாம். உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான ஒரு ஏற்பாடு தான் இது. எனவே, வாடிக்கையாளர் விபரங்களை கேட்டால் தயங்காமல் கொடுங்கள். வட அமெரிக்க நாடான கனடாவின் கிரிக்கெட் அணியில் தற்போது இந்திய வம்சாவளி வீரர்கள் அதிகளவில் இடம் பிடித்துள்ளனர்.
அணியின் கேப்டன் தில்பீரித் பஜ்வா, பஞ்சாபின் குருதாஸ்பூரில் பிறந்தவர். நவ்நீத் தாலிவால், சண்டிகரைச் சேர்ந்தவர். இதே போல், ஹர்ஷ் தாக்கூர், ஷ்ரேயஸ் மோவா என பலர் இடம் பெற்று உள்ளனர். இந்தியர்கள் எங்கெல்லாம் செல்கின்றனரோ அந்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகின்றனர். அதே சமயம் தங்கள் சொந்த நாட்டின் வேர்களையும் அவர்கள் மறப்பதில்லை.
அச்சம்
நாடு முழுதும் பொதுத்தேர்வுகள் நெருங்கி வருகின்றன. எனவே, மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். தேர்வை கண்டு அச்சம் கொள்ளக்கூடாது. மதிப்பெண் அட்டை மட்டுமே தகுதியை தீர்மானிக்காது. எனவே, உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். முழு மனதோடு தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
உறுப்பு தானத்தால் உயிர் வாழும் குழந்தை
பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:
எந்தவொரு பெற்றோருக்கும், பெற்ற குழந்தையை இழப்பதை விட பெரும் துயரம் வேறு இருக்க முடியாது. கேரளாவில், பிறந்து பத்து மாதங்களே ஆன ஆலின் ஷெரின் என்ற பெண் குழந்தை சமீபத்தில் உயிரிழந்தது. இத்தனை பெரிய துயரத்திற்கு இடையிலும், ஆலின் பெற்றோர் அருண் ஆபிரஹாம், தாய் ஷெரின் மேற்கொண்ட ஒரு தீர்மானம் ஒட்டுமொத்த தேச மக்களின் இதயங்களையும் அன்பால் கனக்க செய்தது.
ஆலினுடைய உடல் உறுப்புகளை அவர்கள் தானம் செய்ய தீர்மானித்தனர். ஆலின் இன்று நம்மிடையே இல்லாமல் போனாலும், குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்தோரின் பட்டியலில் அவர் பெயர் சேர்ந்துவிட்டது. உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருவதற்கு இந்த சம்பவமே சாட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
ராஜாஜிக்கு சிலை!
பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:
சுதந்திரம் அடைந்த பிறகும், ஜனாதிபதி மாளிகையில் பிரிட்டிஷாரின் சிலைகளே நிறுவப்பட்டன. அந்த மரபை உடைத்தெறியும் வகையில், நம் நாட்டின் முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியின் உருவச்சிலை, அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ஜனாதிபதி மாளிகையின் மையப்பகுதியில் நாளை திறந்து வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

