மும்மொழிக்கு ஆதரவாக கையெழுத்து அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நீக்கம்
மும்மொழிக்கு ஆதரவாக கையெழுத்து அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நீக்கம்
UPDATED : மார் 08, 2025 12:00 AM
ADDED : மார் 08, 2025 10:43 AM
சென்னை:
மும்மொழிக்கு ஆதரவாக கையெழுத்திட்ட, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புதிய தேசிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கைக்கு, ஆளும் தி.மு.க.,வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, தமிழகம் முழுதும் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை, பா.ஜ., நடத்தி வருகிறது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையயம் அருகே, மஞ்சங்கரணை பகுதியில், பா.ஜ., சார்பில் மும்மொழிக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அப்போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமாரிடம், பா.ஜ.,வினர் கையெழுத்து போடுமாறு கேட்டனர். அவரும் உடனே கையெழுத்து போட்டார்.
மும்மொழி கொள்கைக்கு எதிராக, அ.தி.முக., இருக்கும் நிலையில், அக்கட்சியின் நிர்வாகியே அதற்கு ஆதரவாக கையெழுத்து போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, விஜயகுமாரை கட்சியிலிருந்து நீக்கி, பொதுச்செயலர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான விஜயகுமார், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என கூறியுள்ளார்.
வற்புறுத்தியதால் கையெழுத்திட்டேன்
கிராமத்து வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, பா.ஜ.,வினர் எனது காரை வழிமறித்து கையெழுத்து கேட்டனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை, அ.தி.மு.க., கொள்கைதான் என் கொள்கை என சொன்னேன். ஆனாலும், உள்ளூர் பா.ஜ.,வினர் வற்புறுத்தினர். நீங்கள் போட்டோ, வீடியோ எடுத்து, அதை பரப்புவீர்கள் என்று மறுத்தேன். அப்படியெல்லாம் செய்ய மாட்டோம் என்று சொன்னார்கள். இப்படி வற்புறுத்தியதால் கையெழுத்து போட்டு விட்டேன்.
உறுதி அளித்ததற்கு மாறாக, வீடியோவை பொதுவெளியில் பகிர்ந்து விட்டனர். இப்படி மோசடி செய்வர் என நினைக்கவில்லை. நடந்த நிகழ்வுகளை கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்துக் கூறுவேன்; மன்னிப்பும் கேட்பேன். பெரிய மனதோடு அவரும் மன்னித்து, கட்சியில் இணைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்தார்.