கரசூர் தொழிற்பூங்கா பணிகள்... தொய்வு; வேகமெடுக்குமா என எதிர்பார்ப்பு
கரசூர் தொழிற்பூங்கா பணிகள்... தொய்வு; வேகமெடுக்குமா என எதிர்பார்ப்பு
UPDATED : மார் 08, 2025 12:00 AM
ADDED : மார் 08, 2025 10:46 AM
புதுச்சேரி:
கரசூர் தொழிற்பூங்கா பணிகளை தனி கவனம் செலுத்தி வேகப்படுத்தினால்மட்டுமே புதுச்சேரி அரசு முதலீடுகளை ஈர்க்க முடியும்.
தொழில்துறையை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் சிறப்பு பொருளாதார மண்டலம் துவங்க மத்திய அரசு அறிவித்தது. அந்த திட்டத்தின் கீழ், கடந்த 2005ல் புதுச்சேரி அரசு, சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்த திட்டமிட்டது. இதற்காக சேதாரப்பட்டில் 2007-ல் 748 ஏக்கர் நிலம் 72 கோடி ரூபாய் செலவில் கையகப்படுத்தப்பட்டது.
புதுச்சேரி அரசு நிறுவனமான பிப்டிக் மூலம் கையகப்படுத்திய நிலத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து 18 மாதங்களில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் இத்திட்டத்திற்கு உயிர் கிடைத்துள்ளது.
இருப்பினும், கரசூர் தொழிற்பூங்கா ஆயத்த பணிகள் ஜவ்வாக இழுத்து வருவது புதுச்சேரியில் முதலீடு செய்ய காத்திருக்கும் முதலீட்டாளர்கள் மத்தியில் விரத்தியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் சிப்காட் தொழிற்பூங்காக பணிகள் வேகமெடுத்துள்ள சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் கவனம் அங்கு திரும்பியுள்ளது. அங்கு தொழிற்சாலைகளை அமைப்பது தொடர்பாக முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக அரசினையும் அணுகி வருகின்றனர்.
புதுச்சேரியை காட்டிலும் திண்டிவனம் சிப்காட்டில் தொழில் துவங்க ஆர்வம் காட்டுவது ஏன் என, முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழகத்தை காட்டிலும் புதுச்சேரியின் மின் கட்டணம் குறைவு. தண்ணீரும் தடையில்லாமல் கிடைக்கும்.
எது தேவையென்றாலும் புதுச்சேரி அரசினை எளிதாக அணுகிவிட முடியும். இதனால் புதுச்சேரியில் தான் எங்களுடைய முதல் சாய்ஸ். இருப்பினும் தமிழகத்தின் சிப்காட் தொழில் பூங்கா போன்று புதுச்சேரியில் வேகம் இல்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி கரசூர் தொழிற்பூங்கா பணிகளை துவங்கினாலும் இப்போது தான் பிப்டிக் நிறுவனத்திற்கு வழங்க அரசு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் பின் நிலத்தை பிப்டிக் தொழிற்பேட்டைக்கு பத்திர பதிவு செய்து மாற்ற வேண்டும். அதன் பிறகு பிளான் போட வேண்டும். முதலீடுகளை ஈர்த்து தொழிற்சாலைகளுக்கு மனை பிரிவு ஒதுக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டே உள்ளது. இப்போது இருக்கும் அரசு கரசூர் தொழிற்பூங்கா ஆரம்பிக்க ஆர்வம் காட்டுகிறது. ஆட்சி மாறினாலும் காட்சிகளும் மாறும். அடுத்து வரும் அரசு கரசூர் தொழிற்பூங்கா விஷத்தில் ஆர்வம் காட்டும் என்று சொல்ல முடியாது. அந்த திட்டத்தை கிடப்பில் போடவும் வாய்ப்புள்ளது.
இதனால், நிச்சயம் இல்லாத புதுச்சேரி கரசூர் பூங்காவை நம்பி, திண்டிவனம் சிப்காட் பூங்காவை தொழில் துவங்கும் வாய்ப்பினை இழக்க விரும்பவில்லை. இதன் காரணமாகவே சிப்காட்டிலும் மனைகள் வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றோம் என்றனர்.
புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள் இடம் பெயர்ந்து வருவது குறித்து முதல்வர் ரங்கசாமி அண்மையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதுபோன்று தொழிற்பூங்கா அமைப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளவே அரசு பல ஆண்டுகளை கடத்தினால், தொழிற்சாலைகள் மட்டுமின்றி முதலீடுகளும் வேறு மாநிலங்களுக்கு செல்வதை இனி வேடிக்கை தான் பார்க்க முடியும். சட்டசபை தேர்தலுக்கு முன்பே, கரசூர் பூங்காவை மேம்படுத்தி, முதலீட்டாளர்களுக்கு மனைகள் ஒதுக்க வேண்டும் என, தொழில் துறையினர், முதலிட்டாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.