UPDATED : ஜன 20, 2025 12:00 AM
ADDED : ஜன 20, 2025 02:26 PM

திருப்பரங்குன்றம்:
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதன் கழுகு பார்வை போட்டோக்களை எக்ஸ் தளத்தில் எய்ம்ஸ் நிறுவனமே பதிவிட்டுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என 2018ல் அறிவிக்கப்பட்டு 2019 ஜனவரியில் மதுரையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணிகள் துவங்காமல் இருந்தது.
முதலில் ரூ. 1624 கோடியில் ஜப்பான் ஜெய்க்கா நிறுவனத்தின் நிதி உதவி மூலம் எய்ம்ஸ் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் கட்டமாக எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை சுற்றிலும் ரூ.10 கோடி மதிப்பில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 12 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதிகளில் ரூ. 21 கோடி மதிப்பீட்டில் ஆறு கிலோ மீட்டருக்கு சாலை பணிகளும் நிறைவடைந்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் நிதியும் சேர்த்து ரூ.1977.80 கோடியில் 950 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை கட்டடம், ஆயுர்வேத சிகிச்சை மையம், மாணவர்கள், செவிலியர்களுக்கான வகுப்பறை கட்டடங்கள், ஆய்வுக்கூடங்கள்,விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் கட்டுவதற்காக மதிப்பீடு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக கடந்த ஆண்டு மார்ச்சில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் எல் அண்டு டி நிறுவனம் சார்பில் அந்த இடத்தை சமன் செய்யும் பணிகள் துவக்கப்பட்டது.
33 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணிகளை எய்ம்ஸ் மருத்துவமனையின் எக்ஸ் தள பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.