அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் இன்று இடம் தேர்வு செய்யலாம்
அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் இன்று இடம் தேர்வு செய்யலாம்
UPDATED : ஆக 16, 2024 12:00 AM
ADDED : ஆக 16, 2024 08:52 AM
சென்னை:
அகில இந்திய ஒதுக்கீட்டில், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், இன்று முதல் இடங்களை தேர்வு செய்யலாம்.
நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளில் இருந்து, 15 சதவீத எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன.
சுகாதார சேவை
இந்த இடங்களுக்கு மட்டுமின்றி, எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலை பல்கலைகள், மத்திய பல்கலைகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகத்தின் மருத்துவ கவுன்சிலிங் குழு நடத்துகிறது.
அதன்படி, நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், இம்மாதம், 14 முதல் 20ம் தேதி நண்பகல் 12:00 மணி வரை, https://mcc.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
அன்றைய தினம், 3:00 மணி வரை கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேநேரம், இன்று முதல் 20ம் தேதி நள்ளிரவு 11:55 வரை, விருப்பமான கல்லுாரிகளில் இடங்களை தேர்வு செய்ய லாம்.
தரவரிசை பட்டியல் அடிப்படையில், 21, 22ம் தேதிகளில், கல்லுாரிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். இடம் ஒதுக்கப்பட்ட விபரங்கள், 23ம் தேதி வெளியிடப்படும். வரும் 24 முதல் 29ம் தேதிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லுாரிகளில் சேர வேண்டும்.
கவுன்சிலிங்
சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 30, 31ம் தேதிகளில் நடைபெறும். இரண்டாம் சுற்று கவுன்சிலிங் செப்டம்பர், 5; மூன்றாம் சுற்று கவுன்சிலிங் செப்., 26; இறுதிச் சுற்று கவுன்சிலிங் அக்., 16லும் துவங்கும்.
புனே ராணுவ கல்லுாரியில் உள்ள பி.எஸ்சி., படிப்புக்கு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், இதற்கான சேர்க்கையும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான சேர்க்கையின்போதே நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.