சொத்து வரி செலுத்தாத அரசு கல்லுாரி மாணவர் நலன் கருதி குடிநீர் இணைப்புக்கு அனுமதி
சொத்து வரி செலுத்தாத அரசு கல்லுாரி மாணவர் நலன் கருதி குடிநீர் இணைப்புக்கு அனுமதி
UPDATED : ஜூன் 19, 2024 12:00 AM
ADDED : ஜூன் 19, 2024 09:32 AM
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அடுத்த, குட்டையூர் மாதேஸ்வரன் மலை அருகே, 2018ம் ஆண்டில் இருந்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்படுகிறது.
இங்கு, 1500க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். புதிய கட்டடத்தில் கல்லூரி செயல்பட்டதில் இருந்து, கல்லூரி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்கும்படி, காரமடை பேரூராட்சி மற்றும் நகராட்சியிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.
ஆனால் நகராட்சி நிர்வாகம், கல்லூரி நிர்வாகம் சொத்து வரி,12 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளதை செலுத்தினால் தான், குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர் கானப்பிரியா கூறுகையில், அரசு கட்டடத்திற்கு சொத்து வரி செலுத்த எவ்வித அரசாணையும் எங்களிடம் இல்லை. அதனால் நாங்கள் சொத்து வரி செலுத்தவில்லை, என்றார்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், சொத்து வரி வசூல் செய்யும்படி அரசாணை உள்ளது.
அதன் அடிப்படையில் அரசு கல்லூரிக்கு சொத்து வரி கட்டும்படி தெரிவித்துள்ளோம். இருந்த போதும், கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்லூரிக்கு, 13 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
அப்பகுதியில் எவ்வித குடியிருப்புகளும் இல்லாததால், குட்டையூர் அருகே காரமடை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மெயின் குடிநீர் குழாயில் இருந்து, இரண்டு கிலோமீட்டருக்கு புதிதாக குழாய் பதித்து, கல்லூரிக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
அதற்கான தொகை ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.