மாணவர்கள் இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணு ம்! சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்
மாணவர்கள் இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணு ம்! சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 19, 2024 12:00 AM
ADDED : ஜூன் 19, 2024 09:33 AM
கோவை:
பள்ளி மாணவர்களுக்கு, வகுப்பறையில் கற்றுக்கொடுக்கும் பாடங்களுக்கு தரும் முக்கியத்துவம், களப்பயிற்சிக்கும் வழங்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வகுப்பறையில் பாடம் படிக்கும் மாணவர்கள், தங்களுக்கு தேவையான இதர தகவல்களை தற்போது இணையவழியிலும் சேகரிக்கின்றனர். பாடங்களில் சிறந்த மதிப்பெண் எடுப்பது மட்டும் தான் முக்கியம் என்றாகி விட்டது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன், பள்ளிகளில் களப்பயிற்சிக்கு என மாதத்தின் சில நாட்கள் ஒதுக்கப்படும். சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்கள் மாணவர்கள் தாங்களாகவே அறியும் வகையில் நடவடிக்கை ஏற்பட்டது. தற்போது களப்பயிற்சி என்ற ஒன்று, இல்லாமலே போய் விட்டது.
பல பள்ளிகளில் கல்வி சுற்றுலா என்ற பெயரில் அழைத்து சென்றாலும், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்கள் இதில் அதிகம் பேசப்படுவதில்லை. சுற்றுச்சூழலின் அருமை பரவலாக பேசப்பட்டு வரும் இக்காலத்தில், பள்ளிகள் திறக்கப்பட்ட பின், மாணவர்களை களப்பயிற்சியில் அதிகம் ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
மாணவர்களுக்கு அனுபவ கல்வி குறைந்து விட்டது. களப்பயிற்சிக்கு அழைத்து செல்லும் போது தான், அதுகுறித்த சரியான உணர்வு வெளிப்படும். பயிர்கள், காய்கறிகள் எப்படி விளைகின்றன என, விவசாய நிலங்களுக்கு அழைத்து சென்று காண்பிக்கலாம். பயிர்களை விளைவிக்க விவசாயிகள் படும் கஷ்டங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இதன் வாயிலாக, உணவை வீணாக்கக் கூடாது.
நீரை எப்படி சேமிக்க வேண்டும் என்று தெரியும். மூலிகைப் பண்ணைகளுக்கு அழைத்து சென்று, அவற்றின் பெயர்கள், அவை உடலுக்கு தரும் நன்மை குறித்து தெரிவிக்கலாம். அருகில் இருக்கும் வனங்களுக்கு அழைத்து சென்றால், ஒவ்வொருவரும் மரம் வைத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கலாம். வன விலங்குகள் காடுகளை விட்டு வெளியேறி நகருக்குள் வரும் நிலை எதனால் ஏற்படுகிறது என்ற தெரிந்து கொள்ள முடியும். வனத்துறை மட்டுமல்லாமல், பொதுமக்களும் வனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலையை, மாணவர்கள் வாயிலாக கொண்டு செல்ல வழி ஏற்படும்.
பாரம்பரிய கலாசாரம், கட்டட கலைகள், பழங்குடியின மக்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளை, மாணவர்கள் நேரடியாக காண வேண்டும். இந்த அனுபவம், ஆய்வுக் கட்டுரை எழுதவும், வருங்கால சந்ததிகளுக்கு எடுத்து செல்லவும் உதவியாக இருக்கும். மதிப்பெண்களுக்கு கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தை களப்பயிற்சிக்கும் வழங்க வேண்டும். பள்ளிகளில் இருக்கும் பசுமை மன்றங்கள், தேசிய பசுமைப் படை வாயிலாக, இந்நடவடிக்கையில் முனைப்பு காட்ட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.