UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 09:56 AM

புதுச்சேரி:
நிரம்பாத மருத்துவ சீட் விஷயத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலுடன் கலந்து ஆலோசித்து புதிய மாற்றத்தினை சென்டாக் அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.டி., எம்.எஸ்., எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு சென்டாக் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றது.
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் அடிப்படையிலான படிப்புகளுக்கு இன்று அல்லது நாளைக்குள் முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும். இதற்கான பணிகள் சென்டாக் அலுவலகத்தில் இரவு பகலாக நடந்து வருகின்றது. இந்நிலையில் நிரம்பாத மருத்துவ சீட் விஷயத்தில் சென்டாக் புதிய மாற்றத்தினை தற்போது அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளை பொருத்தவரை, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமின்றி தனியார் நிர்வாக இடங்கள், என்.ஆர்.ஐ., இடங்கள் அனைத்தும் சென்டாக் மூலமாகவே விண்ணப்பித்து கணினி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றது.
இந்த இடங்கள் அனைத்துமே முதல் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என மூன்று கட்ட சேர்க்கை நடத்தப்படும். அதன் பிறகு, ஸ்ட்ரே கவுன்சிலிங் என்ற பெயரில் இறுதி கட்ட கவுன்சிலிங் நிரப்பப்படும். அப்படியும் நிரம்பாத நிர்வாக மற்றும் சுயநிதி மருத்துவ இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக கடைசியில் மாற்றி சென்டாக் மூலம் நிரப்பப் படும்.
புதிய அறிவிப்பின்படி நிரம்பாத சுயநிதி மருத்துவ இடங்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டு இடங்களாக மாற்றப்படும் என்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் நிரம்பாத நிர்வாக இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக மாற்றப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனி நிரம்பாத மருத்துவ சீட்டுகள் அனைத்தும் மீண்டும் தனியார் கல்லுாரிகளே நிரப்பி கொள்ளும்.
முதற்கட்டமாக முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் இதற்காக திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்து எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளிலும் இது அமல்படுத்தப்பட உள்ளது.
தலையிட்ட கவர்னர்
முதுநிலை படிப்புகளை பொருத்தவரை 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு உரிமையானது.
அப்படி இருக்கும்போது நிரம்பாத நிர்வாக இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக மாற்றுவது தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்தது. இந்த சிக்கல் தொடர்பாக, கவர்னர் கைலாஷ்நாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரின் ஆலோசனைபடி, தனியார் நிர்வாக சீட்டுகளை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக மாற்ற முடியுமா என்று இந்திய மருத்துவ கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சரிபாதியாக 50 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெற்ற நிலையில், நிரம்பாத நிர்வாக இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற முடியாது என்று தெளிவுப்படுத்தியது. அதையடுத்து இந்த முடிவினை சென்டாக் எடுத்து வெளியிட்டுள்ளது.