அரசு சட்டக் கல்லுாரிக்கு முன் விழாவிற்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
அரசு சட்டக் கல்லுாரிக்கு முன் விழாவிற்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 10:00 AM

மதுரை:
மதுரை அரசு சட்டக் கல்லுாரிக்கு முன் சமூக அல்லது அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில், அங்கு எவ்வித விழா நடத்தவும் அனுமதிக்கவில்லை என அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது.
உசிலம்பட்டி சூர்யபாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை அரசு கல்லுாரிக்கு எதிரே 3 பகுதிகளை இணைக்கும் ரோடுகள் உள்ளன. இதை ஆக்கிரமித்து இக்கல்லுாரியில் படிக்கும் மாணவர்களில் சிலர் தலைவர்களின் விழாவிற்கு பிளக்ஸ் போர்டுகள் வைக்கின்றனர். ஜாதிய பெருமை பேசும் பாடல்களை ஒலிக்கவிடுகின்றனர். வெடிகளை வெடிக்கச் செய்கின்றனர். இரு பிரிவு மாணவர்கள் மோதிக் கொள்கின்றனர். வகுப்பில் பிற மாணவர்கள் பாடத்தை கவனிக்க முடியாமல் இடையூறு ஏற்படுகிறது. சட்டக் கல்லுாரிக்கு முன் சமூக அல்லது அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்கக்கூடாது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: கல்லுாரி வளாகத்திற்கு உள் மற்றும் வெளிப்பகுதியில் விழாக்கள் நடத்துவதற்கு யாரும் அனுமதி கோரவில்லை. எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. கல்லுாரியின் செயல்பாட்டை பாதிக்கும் அளவிற்கு விழா எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.