முதல் தேசிய கூட்டுறவு பல்கலை அடிக்கல் நாட்டினார் அமித் ஷா
முதல் தேசிய கூட்டுறவு பல்கலை அடிக்கல் நாட்டினார் அமித் ஷா
UPDATED : ஜூலை 07, 2025 12:00 AM
ADDED : ஜூலை 07, 2025 10:38 AM

ஆனந்த்:
நம் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலை வாயிலாக, வருங்காலங்களில் இத்துறையில் ஒரே குடும்பம் கோலோச்சும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பணி கிடைக்க வழி வகை செய்யப்படும் என மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில், நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கு, மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று அடிக்கல் நாட்டினார். 125 ஏக்கர் பரப்பளவில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பல்கலை கட்டப்பட உள்ளது.
இதற்கு, கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாகவும், அமுல் நிறுவனத்தை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றியவருமான திரிபுவன் தாஸ் கிஷிபாய் படேலின் பெயர் சூட்டப்பட உள்ளது.
இது குறித்து, மத்திய கூட்டுறவு துறை வெளியிட்ட அறிக்கை:
இப்பல்கலையில் கூட்டுறவு மேலாண்மை, நிதி, சட்டம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளில் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வழி வகை செய்யப்படும். இதற்காக, இளநிலை, முதுநிலை, பிஎச்.டி., உள்ளிட்டவற்றுடன் சான்றிதழ் படிப்புகளையும் கற்க வாய்ப்பு உருவாக்கப்படும்.
பிற மாநிலங்களிலும் இப்பல்கலையின் கிளைகள் திறக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், கூட்டுறவு துறையில் 20 லட்சம் பேருக்கு பயிற்சி கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய அமைச்சர் அமித் ஷா, கூட்டுறவு துறையில் ஒரே குடும்பம் கோலோச்சும் நிலைக்கு இப்பல்கலை முற்றுப்புள்ளி வைக்கும். வருங்காலங்களில் உரிய பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பணி கிடைக்கவும் வழி வகை செய்யப்படும், என்றார்.