முதுகில் குத்தும் முயற்சி: தமிழக அரசின் முடிவுக்கு ஊழியர் சங்கம் வேதனை
முதுகில் குத்தும் முயற்சி: தமிழக அரசின் முடிவுக்கு ஊழியர் சங்கம் வேதனை
UPDATED : பிப் 08, 2025 12:00 AM
ADDED : பிப் 08, 2025 09:55 AM
மதுரை :
பழைய, புதிய ஓய்வூதிய திட்டங்கள், மத்திய அரசின் ஒருங்கிணைந்த திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்ய மூவர் குழுவை தமிழக அரசு அறிவித்தது, நெஞ்சில் ஏந்திய வாளை உருவி, முதுகில் குத்தும் முயற்சியாக உள்ளது என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், தலைவர் பாஸ்கரன் கூறியிருப்பதாவது:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தியது முதல் அதனை ரத்து செய்ய போராடி வருகிறோம். எங்கள் கோரிக்கையின் நியாயத்தால் 2021ல் முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., ஆட்சி வந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். அதனால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பெருவாரியாக ஆதரவு தெரிவித்தனர்.
தேர்தல் முடிந்தபின்னும், பல்வேறு மாநாடுகளில் பங்கேற்று நம்பிக்கை விதைகளை விதைத்துச் சென்றார். 2024ல் மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் பழைய ஓய்வூதிய கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறினர்.
அதன்பின் ஜன.10ல் சட்டசபையில், நிதி அமைச்சர் அளித்த அறிக்கை வியப்பில்ஆழ்த்தியது. மத்திய அரசு அமல்படுத்தும் அனைத்திற்கும் எதிர்வாதம் செய்யும் தமிழக அரசு, ஒய்வூதியத்தை வழங்குவதில் மட்டும் மத்திய அரசின் வழிகாட்டுதலை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தை அளித்தது.
இது நெஞ்சில் ஏந்திய வாளை உருவி முதுகில் குத்தும் முயற்சியே.
தற்போது 4.2.2025ல் பழைய ஓய்வூதியத்திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் மூவர் குழு அமைத்ததால் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
புதிய ஓய்வூதியம்,ஒருங்கிணைந்த ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை.
சத்தீஸ்கர், பஞ்சாப், மஹாராஷ்டிரா, கோவா உட்பட 7 மாநிலங்கள் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. தமிழகத்தில்பழையஓய்வூதியத்திட்டத்தை அறிவிக்க எவ்வித நெருக்கடியும் இருக்காது என நம்புகிறோம்.
எனவே அரசு அறிவித்துள்ள குழுவை திரும்பப் பெற்று, தேர்தல் கால வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத்திட்டத்தை தாமதமின்றி அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.