UPDATED : ஜன 03, 2026 11:19 AM
ADDED : ஜன 03, 2026 11:20 AM
இஸ்லாமாபாத்:
'யுனெஸ்கோ'வால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானின் தக் ஷசீலா நகருக்கு அருகே, அரிய நாணயங்கள் மற்றும் அலங்கார கற்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராவல்பிண்டி மாவட்டத்தில், தக் ஷசீலா நகருக்கு அருகே அமைந்துள்ள பிர் மவுண்டு என்ற உலக பாரம்பரிய இடத்தில், அந்நாட்டின் தொல்லியல் ஆய்வாளர்கள் அரிய பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.
பண்டைய காலத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்ததாக கூறப்படும், கி.மு., 6ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நீல நிற, 'லாபிஸ் லாசுலி' அலங்கார கற்களின் துண்டுகள் மற்றும் பேரரசர் வாசுதேவா மற்றும் பெண் தெய்வம் ஒன்றின் உருவங்களுடன் கூடிய கி.பி., 2ம் நுாற்றாண்டைச் சேர்ந்த குஷான் வம்ச வெண்கல நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இந்த அரிய பொருட்கள், பிர் மவுண்டின் வடக்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தக் ஷசீலா நகரம், ஐ.நா.,வின், யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய இடமாக 1980ல் அறிவிக்கப்பட்டது. இதில், தக் ஷசீலா நாகரிகத்தின் முதல் நகர்ப்புற குடியிருப்பாக பிர் மவுண்டு கருதப்படுகிறது.

