மதுரை மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் இடமாறுதல் கிடைக்குமா என எதிர்பார்ப்பு
மதுரை மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் இடமாறுதல் கிடைக்குமா என எதிர்பார்ப்பு
UPDATED : அக் 23, 2024 12:00 AM
ADDED : அக் 23, 2024 11:01 AM

மதுரை:
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் 15 முதல் 35 குழந்தைகள் வரை உள்ளனர். அவர்களை தினமும் பராமரிப்பது அங்கன்வாடி பணியாளர்களின் பணி.
மாவட்ட அளவில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள மையங்களில் 20 முதல் 30 பணியிடங்கள்வரை என, மாவட்ட அளவில் 400க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் ஒரு மையத்தில் பணியாற்றும் ஊழியர் அருகில் உள்ள மற்றொரு மையத்தையும் சேர்த்து கவனிக்கும் நிலைமை உள்ளது.
கிராமப்புறங்களில் ஒவ்வொரு மையமும் தொலைவில்தான் உள்ளது.இதனால் கூடுதல் பொறுப்புள்ள ஊழியர்கள், வாரத்திற்கு 3 நாள் ரெகுலர் பணியிடங்களிலும், மீதி 3 நாள் கூடுதல் பொறுப்பு மையங்களிலும் பணியாற்றி சமாளிக்கின்றனர். இதனால் சரிவர கவனிக்க இயலாத மையங்களில் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே காலியிடங்களை நிரப்ப அரசு முன்வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதற்காக கலெக்டர், துறை செயலர் உட்பட உயரதிகாரிகள் வரை மனு அளித்தும் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்பும்முன்பு இடமாறுதல் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
அங்கன்வாடி ஊழியர்,உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் வரலட்சுமி கூறுகையில், ஊழியர்கள் காலை 8:30 மணிக்கு மையத்தில்இருக்க வேண்டும். ஊழியர்கள் வெகு தொலைவில் இருந்தும் மையங்களுக்கு செல்கின்றனர். கூடுதல் பொறுப்பாக மையங்களை கவனிப்போருக்கு இது சிரமமானதே. இதற்கு முன்பு 2023 ஜனவரியில் இடமாறுதல் வழங்கப்பட்டது. இந்தாண்டு மாறுதல் குறித்து கலெக்டர் உட்பட அதிகாரிகளிடம் தெரிவித்துஉள்ளோம் என்றார்.