தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜூனில் அனிமேஷன் வகுப்பு துவக்கம்
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜூனில் அனிமேஷன் வகுப்பு துவக்கம்
UPDATED : ஏப் 23, 2024 12:00 AM
ADDED : ஏப் 23, 2024 06:11 PM
ராசிபுரம்:
தமிழகத்தில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, வரும் ஜூனில் இருந்து அனிமேஷன் வகுப்பு தொடங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில், 31,000 தொடக்க பள்ளிகளில், 25 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மத்திய அரசின், சமக்ர சிக்சா என்ற பெயரில் அழைக்கப்படும் முழுமையான கல்வி திட்டம், அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனிமேஷனுடன் பாடம் நடத்தும் இத்திட்டம், தமிழகத்தில், வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மாணவர்கள், பாடங்களை ஆர்வமுடன் படிக்கவும், எளிதில் புரிந்துகொள்ளவும் அனிமேஷன் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும், பிராட்பேண்ட் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப்பணியும், 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. ஏப்., 30க்குள் இப்பணி, 100 சதவீதம் முடிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மே மாத இறுதிக்குள் அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும், 'ஸ்மார்ட் போர்டு' வழங்கப்பட உள்ளது. மணற்கேனி என்ற அப்ளிகேஷனில் ஏற்கனவே, 6ம் வகுப்பில் இருந்து, 12ம் வகுப்பு வரையிலான பாடங்கள், வீடியோக்களாக உள்ளன.
இதிலேயே, 5ம் வகுப்பு வரை உள்ள அனிமேஷன் பாடங்களை வழங்க உள்ளனர். ஜூன், 1 முதல், 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளிகளில் அனிமேஷன் முறையில் பாடங்கள் நடத்தப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மேலும் அவர்கள் கூறியதாவது:
ஸ்மார்ட் வகுப்புக்கு தேவையான லேப்டாப்கள் தொடக்க பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. மேலும், டேப் வழங்கும் திட்டமும் உள்ளது. 'டேப்' கிடைக்க தாமதமானாலும், ஜூன் மாதத்தில், லேப்டாப் மூலம் அனிமேஷன் வகுப்பு தொடங்கிவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.