UPDATED : மே 01, 2024 12:00 AM
ADDED : மே 01, 2024 10:02 PM
சென்னை:
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பதை நிறுத்தக்கோரி, துணைவேந்தர் அலுவலகம் முன், அண்ணா பல்கலை தற்காலிக பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலையின் ஆசிரியரல்லாத அலுவலக பணிக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க, பல்கலை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தனியார் நிறுவனம் வழியே நியமன பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், நாளை பணி நியமன ஆணை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கு அண்ணா பல்கலையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை வலியுறுத்தி, தற்காலிக பணியாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, பணியாளர் சங்க தலைவர் எஸ்.வெற்றிவேல் கூறியதாவது:
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நேரத்தில், எந்த புதிய நியமனங்களையும் மேற்கொள்ளக்கூடாது. அதேபோல், பல ஆண்டுகளாக அண்ணா பல்கலையில் தற்காலிக பணியாளர்கள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மாறாக ஒப்பந்த பணியாளர்களை, திடீரென நியமிப்பதை நிறுத்த வேண்டும். பல்கலையின் துணைவேந்தர் வேல்ராஜை சந்தித்து, இதுகுறித்து கோரிக்கை அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.