UPDATED : ஏப் 14, 2024 12:00 AM
ADDED : ஏப் 14, 2024 06:44 PM
சென்னை:
அண்ணாமலை பல்கலையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாகக் கூறி, அவர்களுக்கு பதவி குறைப்பு, சம்பள குறைப்பு செய்து அரசு பிறப்பித்த உத்தரவுகளை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை நிர்வாகம், கடந்த 2013ல் அரசு வசம் வந்ததை தொடர்ந்து, கூடுதல் பணியாளர்களை அரசின் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றினர்; ஆசிரியர்கள், அரசு கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர். இவ்வாறு 1,204 ஆசிரியர்கள், 3,246 ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மாற்றப்பட்டனர்.
பல்கலையில் சிறப்பு அதிகாரிகளாக, மண்டல அதிகாரிகளாக, உதவி புரோகிராமர்களாக பதவி வகித்தவர்களுக்கு, பதவி குறைப்பு செய்யப்பட்டு, சம்பளமும் குறைக்கப்பட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவு:
நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக, பல்கலையின் நிர்வாகத்தை அரசு எடுத்தது பாராட்டுக்குரியது என்றாலும், அதற்கு ஈடாக ஊழியர்களின் கண்ணியத்தையும், நிதி இழப்பையும் எடுத்துக் கொள்ள முடியாது.
பல்வேறு பதவிகளை வகித்தவர்களை, குறைவான நிலைக்கு இறக்கி விட முடியாது; கண்ணியத்தையும் குறைக்க முடியாது. இது, அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவது போலாகும்.
வேறு பணிக்கு மாற்றும் போது, அதே பதவியிலோ அல்லது இணையான பதவியிலோ நியமிக்கப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கும். மனுதாரர்களின் பணி நிலையை குறைத்து, சம்பளத்தையும் குறைத்து பிறப்பித்த உத்தரவுகள் சட்டவிரோதமானவை.
பழைய சம்பளத்தை, பதவியை, மீண்டும் வழங்குவதற்கான உத்தரவை, அரசும் அண்ணாமலை பல்கலையும் பிறப்பிக்க வேண்டும். சம்பள குறைப்பு ஏற்கனவே செய்திருந்தால், வித்தியாச தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.