மருந்தாளுனர் கல்லுாரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் காலி
மருந்தாளுனர் கல்லுாரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் காலி
UPDATED : ஏப் 14, 2024 12:00 AM
ADDED : ஏப் 14, 2024 06:39 PM
சென்னை: தமிழகத்தில் 94 தனியார் மருந்தாளுனர் கல்லுாரிகள் உள்ளன. அதேநேரம், அரசு மருந்தாளுனர் கல்லுாரிகள், சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே உள்ளன.
அங்கு, இளநிலை பி.பார்ம்., மற்றும் முதுநிலை எம்.பார்ம்., என, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், இந்த இரண்டு மருந்தாளுனர் கல்லுாரிகளிலும், பேராசிரியர் பணியிடங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, மருந்தாளுனர் பேராசிரியர்கள் கூறியதாவது:
இரண்டு அரசு மருந்தாளுனர் கல்லுாரிகளிலும், ஒன்பது பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. ஆனால், நான்கு பேராசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
ஐந்து இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல, 18 அசோசியேட் பேராசிரியர் பணியிடங்களில், 16 இடங்கள் காலியாக உள்ளன. அதேநேரம், 53 உதவி பேராசிரியர்களை வைத்து தான், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
உதவி பேராசிரியர்கள் நியமனத்திலும், அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர்களாக பணியாற்றியவர்கள் தான் நியமிக்கப்படுகின்றனர்.
அதேபோல, படிக்கும் மாணவர்களுக்கு போதிய அளவில் விடுதிகள் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. இந்திய பார்மசி கவுன்சில், சென்னை மருந்தாளுனர் கல்லுாரிக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேநிலை நீடித்தால், அங்கீகாரம் ரத்தாகுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.