UPDATED : செப் 16, 2026 07:09 PM
ADDED : செப் 16, 2026 07:10 PM
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து, நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், இரண்டு ஆண்டுகளாக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது, 2012 முதல் ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள பணப்பயன்களை வழங்குவது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக., 19ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
செப்., 3ம் தேதி, வீட்டு வசதி துறை அமைச்சர் ராஜ்குமார், போராட்ட குழுவினருடன் பேச்சு நடத்தினார். முதல்வரிடம் தெரிவித்து, பிரச்னைக்கு தீர்வு காண்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், நேற்று வரை பல்கலை நிர்வாகம் சார்பில், எவ்வித பதிலும் தெரிவிக்காத நிலையில், மூன்று நாள் விடுமுறைக்கு பின்பு, நேற்று முதல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
பல்கலை ஆசிரியர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், பல்கலையின் அனைத்து துறைகளின் கதவுகளும் மூடப்பட்டன. வகுப்புகள் நடைபெறாததால் மாணவர்கள் கலைந்து சென்றனர். பல்கலை நிர்வாக அலுவலகம், தேர்வு துறை அலுவலகம் என அனைத்தும் பூட்டப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
