பொள்ளாச்சி நகராட்சி பள்ளிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்கல்
பொள்ளாச்சி நகராட்சி பள்ளிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்கல்
UPDATED : செப் 16, 2026 07:07 PM
ADDED : செப் 16, 2026 07:09 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி நகராட்சி சுகாதாரத்துறை சார்பில், பள்ளிகளில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சி சார்பில், டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன், மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள், டெங்கு பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கினார்.
பள்ளி வளாகம், வீடுகளில் தண்ணீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் உள்ளிட்டவை அகற்றுவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
பருவமழைக் காலங்களில் கொசுக்களால் பரவும் நோய்களை, தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை சித்தா மருந்தாளுனர் காமராஜ் வழங்கினார்.
நகர்நல அலுவலர் கூறியதாவது:
மாணவர்கள் தங்களது வீடுகள், சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன், தங்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
டெங்கு தடுப்பு என்பது நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுடன் மட்டுமல்லாமல், மாணவர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டிய பணியாகும்.
எனவே, பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல், தொடர்ந்து கண்காணித்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
