அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு: அரசு உத்தரவுக்கு கவர்னர் எதிர்ப்பு
அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு: அரசு உத்தரவுக்கு கவர்னர் எதிர்ப்பு
UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 08:23 AM
மும்பை:
அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி., உறுப்பினர் இல்லாமல் உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கவர்னர் ரவி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை கவர்னர் அமைத்தார். இக்குழுவில் கவர்னர், தமிழக அரசு, பல்கலை சிண்டிகேட் மற்றும் யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி சேர்க்கப்படுகிறார். தேடுதல் குழுவின் கன்வீனராக கவர்னரின் பிரதிநிதியை நியமித்து, குழு அமைப்பதற்கான உத்தரவை வெளியிட வேண்டும் என அக்., 25ல் தமிழக அரசுக்கு கவர்னர் உத்தரவிட்டார்.
ஆனால், கடந்த 9 ம் தேதி தேடுதல் குழு அமைப்பதற்கான உத்தரவை தமிழக அரசின் உயர்கல்வித்துறை அரசிதழில் வெளியிட்டது. இதில், வேண்டுமென்றே யு.ஜி.சி., சேர்மனின் பிரதிநிதி விடுபட்டு உள்ளார். இது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது.2021 ல் யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவின் பரிந்துரைப்படி துணைவேந்தர் நியமிப்பது சட்ட விரோதம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
யு.ஜி.சி., விதிமுறைகளுக்கும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கும் எதிராக உள்ளதால், தமிழக அரசின் அறிவிப்பு செல்லாது. இதனால், இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கவர்னர் ரவி கூறியுள்ளதாக கவர்னர் மாளிகை கூறியுள்ளது.